/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனுமதி இல்லாத தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள்...:அலட்சியம் பல ஆண்டு வரி பாக்கியால் அடிப்படை வசதிகளுக்கு திணறும் ஊராட்சிகள்
/
அனுமதி இல்லாத தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள்...:அலட்சியம் பல ஆண்டு வரி பாக்கியால் அடிப்படை வசதிகளுக்கு திணறும் ஊராட்சிகள்
அனுமதி இல்லாத தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள்...:அலட்சியம் பல ஆண்டு வரி பாக்கியால் அடிப்படை வசதிகளுக்கு திணறும் ஊராட்சிகள்
அனுமதி இல்லாத தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள்...:அலட்சியம் பல ஆண்டு வரி பாக்கியால் அடிப்படை வசதிகளுக்கு திணறும் ஊராட்சிகள்
ADDED : மார் 20, 2025 02:11 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியில்லாமல் மற்றும் அனுமதி புதுப்பிக்காமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், வரி இழப்பு ஏற்படுவதோடு, அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்ற முடியாமல் ஊராட்சிகள் திணறி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்துார், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், பூந்தமல்லி, பள்ளிப்பட்டு, பூண்டி, ஆர்.கே.பேட்டை, சோழாவரம், திருத்தணி, திருவாலங்காடு, வில்லிவாக்கம் ஆகிய 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், 1,300க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 700க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் எவ்வித அனுமதியும் இல்லாமல் இயங்கி வருகின்றன.
இதனால், ஊராட்சிகளுக்கு வரி இழப்பு ஏற்பட்டு வருகிறது-. மேலும், இந்த தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதால், பகுதிவாசிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சில பகுதிகளில் ஊராட்சிக்கு சொந்தமான அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்குள் அனுமதி பெற வேண்டுமென வலியுறுத்தி கடிதம் வழங்கியும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஊராட்சி பகுதியில் அனுமதியில்லாமல் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு, ஆளுங்கட்சி பிரமுகர்கள் தலையீடால் குழப்பம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு
அனுமதியில்லாமல் இயங்கும் தொழிற்சாலைகளால் ஊராட்சிக்கு வரவேண்டிய வரியினங்கள் பாதிக்கப்படுவதால் சாலை, குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றன.
கடந்த 2023 பிப்ரவரி மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனு நீதி நாள் கூட்டத்தில், அப்போதைய கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸிடம், கடம்பத்துார் ஒன்றியக்குழு உறுப்பினரும், 10வது வார்டு கவுன்சிலருமான பா.தரணி புகார் அளித்தார்.
அதில், 'கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கொப்பூர், பாப்பரம்பாக்கம், புதுவள்ளூர் உட்பட பல ஊராட்சிகளில், 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் கட்டட அனுமதி பெறாமல் ஊராட்சி, ஒன்றிய அனுமதி இல்லாமல் இயங்கி வருகிறது' எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த புகார் மீது தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது.
எனவே, மாவட்டம் முழுதும் கலெக்டர் ஆய்வு செய்து அனுமதியின்றி, அனுமதி புதுப்பிக்காமல் மற்றும் வரி செலுத்தாமல் இயங்கும் தொழிற்சாலை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி கூறியதாவது:
முதலில் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும். பின், அரசு அனுமதி பெற்று தான் பிற பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்டட பணிகள் மற்றும் தொழில் குறித்து முறையான அனுமதி பெற வேண்டும்.
இதையும் மீறி அனுமதி இல்லாமல், ஊராட்சிக்கு வரி செலுத்தாமல் இயங்கும் தொழிற்சாலைகள் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.