/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி ரயில் பாதைக்கான... திட்ட அறிக்கை தயார்!10 ஸ்டேஷன்களுடன் ரூ.3,136 கோடியில் செயல்படுத்த முடிவு
/
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி ரயில் பாதைக்கான... திட்ட அறிக்கை தயார்!10 ஸ்டேஷன்களுடன் ரூ.3,136 கோடியில் செயல்படுத்த முடிவு
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி ரயில் பாதைக்கான... திட்ட அறிக்கை தயார்!10 ஸ்டேஷன்களுடன் ரூ.3,136 கோடியில் செயல்படுத்த முடிவு
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி ரயில் பாதைக்கான... திட்ட அறிக்கை தயார்!10 ஸ்டேஷன்களுடன் ரூ.3,136 கோடியில் செயல்படுத்த முடிவு
ADDED : செப் 17, 2025 01:50 AM

சென்னை புறநகர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி புதிய ரயில் பாதை திட்டத்தை, 3,136 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திட, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப, அதையொட்டிய புறநகர் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன.
குறிப்பாக, சென்னையை ஒட்டி அமைந்துள்ள, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
2013ல் அறிவிப்பு தாம்பரமும், ஆவடியும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை.
கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளதால், சில வழித்தடங்களில் மாநகர பஸ்களின் இயக்கம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய ரயில் போக்கு வரத்து வசதிக்கான பணிகள் இன்னும் முடியாமல் உள்ளன.
பயணியர் போக்கு வரத்து மற்றும் சரக்கு ரயில் போக்கு வரத்துக்காக, ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் -- கூடுவாஞ்சேரி வழித்தடத்தில், 58 கி.மீ., துாரத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என, 2013ல் அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு, ரயில்வேயின் ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. 234 பக்கத்திற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
மொத்த திட்ட மதிப்பீடு, நிலம் தேவை, ரயில் நிலையங்களின் அமைவிடங்கள், பயணியர் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ஆவடி - ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரியை இணைக்கும் வகையிலான, புதிய ரயில் பாதை திட்டம் மிகவும் முக்கியமானது. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 58 கி.மீ., துாரம் உடைய இப்புதிய ரயில் பாதைக்கு, தனியாரிடமிருந்து, 57.19 ஹெக்டேர் அதாவது, 141.31 ஏக்கர் நிலம் உட்பட, 229 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட உள்ளது.
ஆவடி, வயலாநல்லுார், திருமழிசை, தண்டலம், ஸ்ரீபெரும்புதுார், வல்லக்கோட்டை, ஒரகடம், நாட்டரசன்பேட்டை, கூடுவாஞ்சேரி, இருங்காட்டுக்கோட்டை ஆகிய, 10 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த தடத்தில் ஆண்டு தோறும், 43.51 லட்சம் பேர் பயணிப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் உட்பட பல்வேறு வகையான தொழிற்சாலைகளும் இந்த வழித்தடத்தில் இருப்பதால், சரக்கு போக்குவரத்துக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. நிலம் கையகப்படுத்துதல் உட்பட அனைத்து வகை செலவுகளுக்கான மொத்த திட்ட மதிப்பீடு, 3,136 கோடி ரூபாய்.
பங்களிப்பு இதில், ரயில் பாதை கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மட்டுமே 945.78 கோடி ரூபாய் செலவாகும். இந்த திட்டப்பணிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இருப்பினும், பெரிய அளவிலான நிதி மற்றும் நிலம் கையகப்படுத்துவதில், மாநில அரசின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். ரயில்வேயுடன் தமிழக அரசு இணைந்து பங்களிப்பு செய்தால், இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றிட முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -