/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலைகளில் தொடரும் பேனர் கலாசாரம்; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
/
நெடுஞ்சாலைகளில் தொடரும் பேனர் கலாசாரம்; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
நெடுஞ்சாலைகளில் தொடரும் பேனர் கலாசாரம்; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
நெடுஞ்சாலைகளில் தொடரும் பேனர் கலாசாரம்; வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்
ADDED : செப் 23, 2024 05:52 AM

திருவள்ளூர் : சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலை போக்குவரத்து சிக்னல் பகுதியில் உள்ள உயரமான கட்டடங்களில் விளம்பர பேனர்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
சென்னை, பள்ளிக்கரணையில், 2019ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், நெடுஞ்சாலையில் வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில், டூ- -- வீலரில் வந்த சுபஸ்ரீ, 23, என்ற பெண் மீது பேனர் விழுந்தது. பின்னால் வந்த லாரியில் சிக்கி அவர் இறந்தார்
தடை உத்தரவு
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் விளம்பர பேனர்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.
ஆனால் அனுமதியின்றி நெடுஞ்சாலையோரங்களில் பேனர் வைப்பது, கட்சி கொடிகள் கட்டுவது போன்றவை தினமும் நிகழ்ந்து வருகின்றன.
இதேபோல், திருமணம், பிறந்த நாள், நினைவஞ்சலி, படிப்பு போன்றவற்றிற்கு கூட நெடுஞ்சாலையோரம் பேனர் வைப்பது தொடர்ந்து வருகிறது.
இதை தடுக்க வேண்டிய காவல் துறையினர், கண்டும், காணாமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலையோரம் மற்றும் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உயரமான கட்டடங்கள் மீது மெகா சைஸ் விளம்பர பேனர்கள் வைப்பது மீண்டும் சூடுபிடித்துள்ளது.
இந்த விளம்பர பேனர்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
விபத்து
குறிப்பாக சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை, திருமழிசை சிப்காட், பாப்பரம்பாக்கம், செட்டிபேடு, தண்டலம் இருங்காட்டு கோட்டை, ஸ்ரீபெரும்புதுார் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து சிக்னல் பகுதியில் உயரமான கட்டடங்கள் மீது மெகா சைஸ் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அனுமதியில்லாமல் உயரமான கட்டடங்களில் வைக்கப்படும் மெகா சைஸ் விளம்பர பேனர்களால் மற்றும் மொபைல்போன் டவர்களால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
மேலும் சில இடங்களில் உயரமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் கிழிந்து தொங்கி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த மெகா சைஸ் விளம்பர பதாகைகள் வைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, அதன் பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு கட்டணம் செலுத்தி வைக்க வேண்டும்.
ஆனால் நெடுஞ்சாலையோரம் உயரமான கட்டடங்கள் மீது வைக்கப்படும் மெகா சைஸ் விளம்பர பேனர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் வைக்கப்பட்டு வருகின்றன.