ADDED : செப் 26, 2025 10:36 PM
திருமழிசை:வெள்ளவேடு பகுதியில் தாயிடம் பால் குடித்த 46 நாளே ஆன பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமழிசை அடுத்த வெள்ளவேடைச் சேர்ந்தவர் சூர்யா, 25. இவரது மனைவி சாருலதா, 23. இவர்களுக்கு, பிறந்து 46 நாளே ஆன ஆண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் சாருலதா, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல், சாருலதா குழந்தையை துாங்க வைத்துள்ளார். அதன் பின், 12:30 மணியளவில் குழந்தை அசைவின்றி இருந்ததால் அதிர்ச்சியடைந்த தம்பதி, உடனே பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யா அளித்த புகாரின்படி, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.