/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செடிகள் வளர்ந்த பாலம் பலவீனமாகும் அபாயம்
/
செடிகள் வளர்ந்த பாலம் பலவீனமாகும் அபாயம்
ADDED : ஏப் 14, 2025 01:09 AM

பொன்னேரி:பொன்னேரி வஞ்சிவாக்கத்தில் இருந்து தத்தமஞ்சி, காட்டூர், திருவெள்ளவாயல் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில், காட்டூர் கிராமத்தின் அருகே, ஓடைக்கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் பராமரிப்பு இன்றி உள்ளது.
பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு சுவர்களில், ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன. இவற்றின் வேர்கள், சுவர்களில் உள்ள சிறு விரிசல்கள் வழியாக சென்று, பாலத்தை பலவீனப்படுத்தி வருகிறது. இவை பெரிதாக வளரும்போது பாலம் முழுமையாக பலவீனமடைந்து வீணாகும் நிலை உள்ளது.
பழவேற்காடு - மீஞ்சூர் இடையே, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் முக்கிய போக்குவரத்து பாலமாக உள்ளது. இந்த பாலம் பராமரிப்பில் நெடுஞ்சாலைத் துறையினர் உரிய கவனம் செலுத்த வேண்டும் என, கிராமவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஏற்கனவே இப்பகுதியில் இருந்த பழைய பாலம், சரியான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்தது. இதன் காரணமாக, புதிய பாலம் அமைக்கப்பட்டது. அதையும் பராமரிப்பதில் நெடுஞ்சாலைத் துறை கவனம் செலுத்துவதில்லை. பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, அவ்வப்போது பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.