அரண் இல்லத்தை செயல்படுத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
அரண் இல்லத்தை செயல்படுத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
UPDATED : நவ 13, 2026 02:48 PM
ADDED : நவ 13, 2026 02:46 PM

திருவள்ளூர்: ‘திருவள்ளூர் மாவட்டத்தில், திருநங்கை, திருநம்பியருக்கான ‘அரண்’ இல்லத்தை செயல்படுத்த விருப்பமுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்’ என, கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ், குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கை, திருநம்பியருக்கு, தற்காலிக பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கும் நோக்கில், திருவள்ளூர் மாவட்டத்தில் ‘அரண்’ தங்கும் இல்லத்தை செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது.
‘அரண்’ தங்கும் இல்லத்தை செயல்படுத்த விருப்பமுள்ள, மூன்றாம் பாலினத்தவர் நலனிற்காக செயல்படும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.
மூன்றாம் பாலினத்தவருக்கான இல்லம், பாதுகாப்பு, பராமரிப்பு, சுகாதாரம், வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். திறன் பயிற்சி, வெளிப்புற செயல்பாடுகளுக்கு போதுமான இடம் இருத்தல் வேண்டும்.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் ‘அரண்’ இல்லத்தை செயல்படுத்த விருப்பமுள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், ‘மாவட்ட சமூகநல அலுவலர், கலெக்டர் அலுவலகம், 2-வது தளம், திருவள்ளூர் – 602 001’ என்ற முகவரிக்கு, வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
