/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓராண்டாக திறக்கப்படாத சக்கரமநல்லூர் ரேஷன் கடை
/
ஓராண்டாக திறக்கப்படாத சக்கரமநல்லூர் ரேஷன் கடை
ADDED : ஆக 02, 2025 11:47 PM

திருவாலங்காடு:சக்கரமநல்லூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம், ஓராண்டாக திறக்கப்படாமல் மூடியே இருப்பதால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருவாலங்காடு ஊராட்சியில் சக்கரமநல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இந்த ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாததால், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இது பழமையான கட்டடம் என்பதால், மழைக்காலங்ககளில் ரேஷன் பொருட்கள் நனைந்து வீணாகி வருகின்றன. மேலும், போதிய இடவசதி இல்லாததால், பொருட்கள் வாங்க முடியாமல் கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2022- - --23ம் ஆண்டு, ஏழு லட்சம் ரூபாயில் ரேஷன் கடை கட்டடம் கட்டும் பணி துவங்கியது. கடந்தாண்டு ஜூன் மாதம் கட்டட பணி நிறைவடைந்தது. ஓராண்டுக்கு மேலாகியும், ரேஷன் கடை கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ரேஷன் கடையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பி.டி.ஓ., அலுவலக அதிகாரி கூறுகையில், 'மின் இணைப்புக்காக விண்ணப்பித்து இருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.