/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செம்பரம்பாக்கம் ஏரி நீரால் சென்னை மக்களின் சுகாதாரம்... கேள்விக்குறி! கூவம் ஆறு, கால்வாய்களில் கழிவுநீர் கலப்பால் கலக்கம்
/
செம்பரம்பாக்கம் ஏரி நீரால் சென்னை மக்களின் சுகாதாரம்... கேள்விக்குறி! கூவம் ஆறு, கால்வாய்களில் கழிவுநீர் கலப்பால் கலக்கம்
செம்பரம்பாக்கம் ஏரி நீரால் சென்னை மக்களின் சுகாதாரம்... கேள்விக்குறி! கூவம் ஆறு, கால்வாய்களில் கழிவுநீர் கலப்பால் கலக்கம்
செம்பரம்பாக்கம் ஏரி நீரால் சென்னை மக்களின் சுகாதாரம்... கேள்விக்குறி! கூவம் ஆறு, கால்வாய்களில் கழிவுநீர் கலப்பால் கலக்கம்
ADDED : டிச 21, 2025 05:26 AM

கடம்பத்துார்: குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில், கூவம் ஆறு மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் வழியாக கழிவுநீர் கலப்பதால், சென்னை மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், பூண்டி சத்தியமூர்த்திசாகர், புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த்தேக்கங்கள், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. இதில், செம்பரம்பாக்கம் ஏரி, 3.645 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. மழைநீரால் தற்போது ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணையில் இருந்து உருவாகும் கூவம் ஆறு, அரண்வாயல் பகுதியில் கிருஷ்ணா கால்வாயாக பிரிந்து தண்டலம் அருகேயும், புதுச்சத்திரம் பகுதியில் உள்ள ஜமீன்கொரட்டூர் அணைக்கட்டில், பங்காரு கால்வாயாக பிரிந்து நேமம், வெள்ளவேடு வழியாக பயணித்து, குத்தம்பாக்கம் அருகேயும் செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
மஞ்சள் நிறம் மணவாளநகர், ஒண் டிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில், 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், திருவள்ளூர் நகராட்சி மூலம் சுத்திகரிக்காமல் வெளியேற்றப்படும் கழிவுநீரும், கூவம் ஆற்றில் கலக்கிறது. கழிவுநீர் கலந்து கூவம் ஆறு மஞ்சள் நிறமாக மாறியுள்ளது.
மேலும், நேமம், வெள்ளவேடு, குத்தம்பாக்கம், திருமழிசை பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை கல்லுாரி மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கிருஷ்ணா கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
கூவம் ஆறு மற்றும் அதன் கிளை கால்வாய்கள் வழியாக வரும் கழிவுநீர், செம்பரம்பாக்கம் ஏரி நீருடன் கலக்கிறது. இதனால், குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் சென்னை மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை தேவை கூவம் ஆறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து கால்வாய்களை உரிய முறையில் பராமரிக்காத நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், உடனே நடவடிக்கை எடுத்து, கூவம் ஆறு மற்றும் நீர்வரத்து கால்வாய்கள் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சென்னை மக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கூறுகையில், 'கூவம் ஆறு, பங்காரு மற்றும் கிருஷ்ணா கால்வாய் பகுதிகளில், அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார்.
நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு கூவம் ஆற்றில் கழிவுநீர் கலந்து நீர்வரத்து கால்வாய்கள் வழியே செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்தடைகிறது. புகார் அளித்தால் பெயரளவிற்கு நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், நீர்வரத்து கால்வாய்களில் கழிவுநீர் கலப்பது தொடர்கதையாக உள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. - து.ஆனந்தகிருஷ்ணன், பகுதிவாசி,மணவாளநகர்.

