/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவையில்... அலட்சியம்:ரயில்வே நிர்வாகம் மீது 2.50 லட்சம் பயணியர் அதிருப்தி
/
சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவையில்... அலட்சியம்:ரயில்வே நிர்வாகம் மீது 2.50 லட்சம் பயணியர் அதிருப்தி
சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவையில்... அலட்சியம்:ரயில்வே நிர்வாகம் மீது 2.50 லட்சம் பயணியர் அதிருப்தி
சென்னை - கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவையில்... அலட்சியம்:ரயில்வே நிர்வாகம் மீது 2.50 லட்சம் பயணியர் அதிருப்தி
ADDED : மே 24, 2025 03:00 AM

பொன்னேரி:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் தினமும் காலதாமதத்துடன் இயக்கப்படுவதால், பயணியர் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். புறநகர் ரயில் சேவையில் அலட்சியம் காட்டும் ரயில்வே நிர்வாகம் மீது, 2.50 லட்சம் பயணியர் அதிருப்தியில் உள்ளனர்.
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், 94 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பொன்னேரி, மீஞ்சூர், எண்ணுார், திருவொற்றியூர் என, 16 ரயில் நிலையங்கள் உள்ளன.
இந்த வழித்தடத்தில், தினமும் 2.00 - 2.50 லட்சம் பயணியர், புறநகர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். மொத்தமுள்ள 47 கி.மீ., தொலைவு துாரத்தை கடக்க, ஒரு மணி நேரம், 30 நிமிடங்களாகும் என, அட்டவணையில் குறிப்பிடப்படுகிறது.
இந்த வழித்தடத்தில், தினமும் 30 - 60 நிமிடங்கள் காலதாமதத்துடனே ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், வேலைக்கு செல்வோர் உரிய நேரத்தில் அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
வடமாநிலங்களுக்கு சென்று வரும் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பொன்னேரி, மீஞ்சூர், எண்ணுார், திருவொற்றியூர், கொருக்குப்பேட்டை, பேசின்பாலம் ஆகிய நிலையங்களில், புறநகர் ரயில்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
சமீப காலமாக அத்திப்பட்டு புதுநகரில் இந்நிலை தொடர்கிறது. ரயில்கள் காலதாமதத்துடன் இயக்கப்படுவதை கண்டித்து, பயணியர் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனின்றி, தற்போதும் அதே நிலை தான் தொடர்கிறது.
இந்த மார்க்கத்தில் கும்மிடிப்பூண்டி வரை, புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் தனித்தனி பாதையில் பயணிப்பதற்காக, நான்கு வழிப்பாதை அமைப்பதற்கான பணிகள் அரைகுறையாக நிற்கின்றன.
மாற்று போக்குவரத்து வசதியில்லாத நிலையில், பயணியர் வேறு வழியின்றி தினமும் காலதாமதத்துடன் செல்லும் புறநகர் ரயில்களில் பெரும் இன்னலுக்கு இடையே பயணித்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகத்தின் மீதும் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, ரயில் பயணியரின் சிரமத்தை போக்கும் வகையில், சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், நான்கு வழி ரயில் பாதை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தவும், புறநகர் ரயில்களை குறித்த நேரத்தில் இயக்கவும், ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.
விரைவு ரயிலால் கூடுதல் தாமதம்
சென்னை சென்ட்ரல் - பிட்ரகுண்டா இடையே இயக்கப்படும் விரைவு ரயில், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இது, காலை - மாலை நேரங்களில், 20 - 40 நிமிடங்கள் காலதாமதத்துடன் பயணிக்கிறது. இதனால், மற்ற புறநகர் ரயில்களின் சேவையும் பாதிக்கிறது. இந்த மார்க்கத்தில் புறநகர் ரயில் பயணியரை ரயில்வே நிர்வாகம் புறக்கணிக்கிறது. பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில்லை. எனவே, விரைவு ரயிலுக்கு என, தனி தண்டவாள பாதை அமைக்க வேண்டும்.
- கு.பிரதாப், ரயில் பயணி, பொன்னேரி.
நரக வேதனையில் பயணிக்கிறோம்!
சென்னை சென்ட்ரலில் இருந்து அத்திப்பட்டு ரயில் நிலையத்திற்கு, அதிகபட்ச பயண நேரம், 40 நிமிடங்கள். ஆனால், தினமும் 1:30 மணி நேரம் பயணிக்கும் நிலை உள்ளது. புறநகர் ரயில்களை மட்டுமே நம்பியுள்ள எங்களை போன்ற பயணியர் தினம், தினம் நரக வேதனையுடன் பயணிக்கிறோம். சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில்கள், பேசின்பாலம் ரயில் நிலைத்தில், 15 - 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, விரைவு ரயில்கள் சென்ற பின் புறப்படுகின்றன. இதே நேரத்தில், அரக்கோணத்தில் இருந்து வரும் ரயில்கள் காத்திருப்பதில்லை. அவை உடனுக்குடன் சென்னை - சென்ட்ரல் ரயில் நிலையம் செல்கிறது. அச்சமயங்களில், கும்மிடிப்பூண்டி ரயிலில் இருக்கும் பயணியர் அவசர அவசரமாக இறங்கி, வேகமாக ஓடி அரக்கோணம் ரயிலில் ஏறுகின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
- எம்.குணசேகரன், ரயில் பயணி, அத்திப்பட்டு.