/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
15 சுரங்கப்பாதையுடன் சென்னை எல்லை சாலை திட்டம் 'விறுவிறு!': பொன்னேரி, மீஞ்சூர் நெரிசலுக்கு தீர்வாக அமைகிறது
/
15 சுரங்கப்பாதையுடன் சென்னை எல்லை சாலை திட்டம் 'விறுவிறு!': பொன்னேரி, மீஞ்சூர் நெரிசலுக்கு தீர்வாக அமைகிறது
15 சுரங்கப்பாதையுடன் சென்னை எல்லை சாலை திட்டம் 'விறுவிறு!': பொன்னேரி, மீஞ்சூர் நெரிசலுக்கு தீர்வாக அமைகிறது
15 சுரங்கப்பாதையுடன் சென்னை எல்லை சாலை திட்டம் 'விறுவிறு!': பொன்னேரி, மீஞ்சூர் நெரிசலுக்கு தீர்வாக அமைகிறது
ADDED : ஆக 12, 2024 07:08 AM

பொன்னேரி: காட்டுப்பள்ளி - தச்சூர் இடையேயான சென்னை எல்லை சாலை திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருவதால், சென்னை, புறநகர் பகுதிகள் மற்றும் பொன்னேரி, மீஞ்சூர் நகர பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு, விரைவில் விமோசனம் கிடைக்க உள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த எண்ணுார் துறைமுகத்திற்கு, வாகனங்கள் வருகின்றன.
இவ்வாகனங்கள், சென்னை புறநகர் மற்றும் பொன்னேரி, மீஞ்சூர் நகரப்பகுதிகளுக்கு செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், வர்த்தக வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் எண்ணுார் துறைமுகத்திற்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
தற்போதைய நெரிசல் மற்றும் எதிர்கால போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, காட்டுப்பள்ளி துறைமுகம் - மாமல்லபுரம் வரை, 132.8 கி.மீ., தொலைவிற்கு சென்னை எல்லை சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குறைந்த நேர பயணம்
இது, எண்ணுார் துறைமுகத்தில் துவங்கி தச்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்பதுார், சிங்கபெருமாள்கோவில், மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி பகுதியில் முடிவடைகிறது.
இத்திட்டம், எண்ணுார் துறைமுகம் - தச்சூர், தச்சூர் - திருவள்ளூர், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள்கோவில், சிங்கபெருமாள்கோவில் - மாமல்லபுரம் என, ஐந்து கட்டங்களாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது.
சென்னை --- கோல்கட்டா, சென்னை -- திருப்பதி, சென்னை -- பெங்களூரு, சென்னை -- திருச்சி ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளையும் இணைக்கிறது.
இதன் வாயிலாக, துறைமுகத்திற்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டுமின்றி, தனியார் வாகனங்களும், மேற்கண்ட பகுதிகளுக்கு குறைந்த நேரத்தில் பயணம் மேற்கொள்ள முடியும்.
முதற்கட்டத்தில் எண்ணுார் துறைமுகம் - தச்சூர் வரை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் நிதியுதவி, 2,122 கோடி ரூபாயில், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், திட்டத்தை செயல்படுத்துகிறது.
இது, எண்ணுார் துறைமுகத்தில் துவங்கி சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை தச்சூரில் முடியும் வகையில், 21.7 கி.மீட்டரில் அமைகிறது.
இந்த சாலையில் இருந்து மீஞ்சூர் - வண்டலுாரை இணைக்கும் வகையில், 3.68 கி.மீ., தொலைவிற்கு இணைப்பு சாலையும் என மொத்தம், 25.38 கி.மீ., தொலைவிற்கு புதிய சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த சாலையானது, எண்ணுார் துறைமுகத்தில் துவங்கி கல்பாக்கம், நாலுார், வன்னிப்பாக்கம், நெடுவரம்பாக்கம், பஞ்செட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சென்று தச்சூரில் முடிகிறது.
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தச்சூரில், வாகனங்கள் இடையூறு இன்றி சாலைகளை தடம்மாறி பயணிப்பதற்கு ஏதுவாக அங்கு 'கிளவர்' வடிவ மேம்பாலம் அமைகிறது.
நிரந்தர தீர்வு
எண்ணுார் காட்டுப்பள்ளி துறைமுகம் - தச்சூர் இடையேயான சென்னை எல்லை சாலை திட்டத்திற்காக, அரசு நிலம், 175 ஏக்கர், தனியார் நிலம், 449 ஏக்கர் என மொத்தம், 624 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளன.
சென்னை எல்லை சாலையில், மீஞ்சூர் - அனுப்பம்பட்டு இடையே ஒன்று, வண்டலுார் சாலை இணைக்கும் சாலையில், மீஞ்சூர் - நந்தியம்பாக்கம் இடையே மற்றொன்று என, இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் அமைகிறது. அதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
மேற்கண்ட திட்டப்பணிகள், வரும், 2025, ஜனவரியில் முடிக்கும் வகையில் சாலைகளில் மண் கொட்டி பரப்புவது, ரயில்வே பாலங்கள், சுரங்கப்பாதைகள், மழைநீர் செல்வதற்கான சிறுபாலங்கள் ஆகியவை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
இப்பணிகள் முடியும் நிலையில், சென்னை புறநகர் பகுதிகள், பொன்னேரி, மீஞ்சூர் நகரப்பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்த தீர்வு கிடைக்கும்.
சென்னை எல்லை சாலை திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை எல்லை சாலை திட்டத்திற்கான முதற்கட்ட பணி 2022 ஜனவரியில் துவங்கி பாதி முடிந்துள்ளன. சில இடங்களில், கட்டுமான பணிகளில் சிரமம் உள்ளது.
சென்னை எல்லை சாலை திட்டத்தால் சென்னை புறநகர் பகுதிகள் உட்பட மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி உள்ளிட்ட இடங்களில், கனரக வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்து, நிரந்தர தீர்வு கிடைக்கும்.
வட மற்றும் தென் மாவட்டங்களில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் துறைமுகத்திற்கு வந்து செல்லும் வாகனங்களும், தடையின்றி குறித்த நேரத்தில் பயணிக்க, இந்த சாலை மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்

