ADDED : அக் 21, 2025 11:22 PM

சோழவரம்: சென்னை குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரியின் கரைகள், 40 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்ட நிலையில், ஓராண்டிற்கு பின், தற்போது ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், முழு கொள்ளளவு தேக்கி வைக்க நீர்வளத்துறை திட்டமிட்டு உள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரி, 1.08 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. ஏரியில் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை தேக்கி வைக்கும்போது, கரைகள் சேதமடைந்து பலவீனமாகின. கடந்த 2023ல் கரைகள் உடையும் நிலை ஏற்பட்டது.
கடந்தாண்டு சோழ வரம் ஏரி சீரமைப்பு பணிகளுக்கு, தமிழக அரசு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. மொத்தம், 3.5 கி.மீ., நீளம் கொண்ட ஏரியின் கரையில், அதிக பாதிப்புள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, 1.04 கி.மீ.,க்கு கரை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கரைகளின் உள்பகுதியில், 6 மீ., உயரத்தில் கான்கிரீட் சுவர், சரிவுகளில் 30 மீட்டர் உயரத்திற்கு பாறை கற்கள் பதிப்பது, கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்களில், நவீன தொழில்நுட்பத்தில் நீர்க்கசிவு தடுப்புச்சுவர், அலை தடுப்புச்சுவர் ஆகிய பணிகள் மேற்கொள்ளப் பட்டன.
இதனால், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, ஏரியில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படவில்லை. அதன் கொள்ளளவில், 50 சதவீதத்திற்கு குறைவாகவே தேக்கி வைக்கப்பட்டது.
ஏரிக்கு வந்த தண்ணீரையும், உடனுக்குடன் ஷட்டர்கள் வழியாக கொசஸ்தலை ஆற்றிற்கு வெளியேற்றப்பட்டது.
தற்போது, சோழவரம் ஏரியின் கரை சீரமைப்பு பணிகள் முடிந்துள்ளதால், ஏரிக்கு வரும் தண்ணீரை முழுமையாக சேமித்து வைக்க நீர்வளத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழையால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி ஏரியில், 0.40 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது.
வினாடிக்கு, 499 கன அடி நீர்வரத்து இருப்பதால், ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியின் கரைகளை கண்காணித்து வருகின்றனர்.