/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பவானியம்மன் கோவில் ஆடி திருவிழாவில் மோதல்
/
பவானியம்மன் கோவில் ஆடி திருவிழாவில் மோதல்
ADDED : ஆக 04, 2025 11:00 PM
பெரியபாளையம், ஆடித் திருவிழாவை ஒட்டி நான்கு கிராம மக்கள் தாய் வீட்டு சீதனம் எடுத்து வந்த விழாவில், திடீர் மோதலால் பெரியபாளையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. பழமை வாய்ந்த இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில், ஆடி மாத விழா சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, பெரியபாளையம் தண்டுமா நகர், அம்பேத்கர் நகர், ராள்ளபாடி, அரியபாக்கம் ஆகிய நான்கு கிராம மக்கள் ஊர்வலமாக ஆட்டம், பாட்டத்துடன் சென்று பொங்கல் வைத்து அம்மனை வழிபடுவர்.
நேற்று முன்தினம் இரவு, நான்கு கிராம மக்கள் உற்சவர் அம்மனுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
அப்போது, ஊர்வலத்தில் இருந்தவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்த மோதலால், ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம், ஆரணி - பெரியபாளையம் இடையே வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மோதலில் ஈடுபட்டவர்களை, பெரியபாளையம் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதன்பின், பக்தர்கள் நள்ளிரவில் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.