/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் பேனர் வைத்தவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை ...திடீர் வேகம்: அனுமதியின்றி விளம்பர பதாகை அமைத்த நால்வர் மீது வழக்கு
/
சாலையோரம் பேனர் வைத்தவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை ...திடீர் வேகம்: அனுமதியின்றி விளம்பர பதாகை அமைத்த நால்வர் மீது வழக்கு
சாலையோரம் பேனர் வைத்தவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை ...திடீர் வேகம்: அனுமதியின்றி விளம்பர பதாகை அமைத்த நால்வர் மீது வழக்கு
சாலையோரம் பேனர் வைத்தவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை ...திடீர் வேகம்: அனுமதியின்றி விளம்பர பதாகை அமைத்த நால்வர் மீது வழக்கு
ADDED : டிச 18, 2025 06:32 AM

திருவள்ளூர்,:திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி சாலையோரம் பேனர் வைத்தவர்கள் மீது, கலெக்டர் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஜே.என்.சாலையோரம் 1.5 கி.மீ.,க்கு விளம்பர பலகை வைத்தவர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் என, நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். 'தமிழகத்தில் சாலையை பயன்படுத்துவோரின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், இருசக்கர மற்றும் பிற வாகன ஓட்டிகளின் கவனம் சிதறும் வகையிலும், நடைமேடைகள், நடைபாதைகள், முக்கிய சாலைகளில் விளம்பர பலகை வைக்கக்கூடாது' என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து சாலைகளிலும், பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள், விளம்பர பேனர்களை அமைத்து வருகின்றனர்.
மேலும், சாலை மைய தடுப்புகளிலும், கட்சி கொடியை கட்டி வருகின்றனர். இதன் காரணமாக, விபத்துக்களும், போக்குவரத்துக்கு இடையூறும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் உள்ள சி.வி.நாயுடு சாலை, ஜே.என்.சாலைகளில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை நடுவே திருவள்ளூர் உள்ளதால், அரசியல் கட்சி விழா, கட்சி தலைவர்கள் செல்லும் போது அவர்களை வரவேற்கும் வகையில், விளம்பர பலகை மற்றும் கொடிகளை கட்டி வருகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சி, ஆறு நகராட்சி, எட்டு பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளிலும் பிறந்த நாள், திருமணம், அரசியல் கட்சி கூட்டம் நடத்துவோர், விதிமீறி சாலையோரம் பேனர்களை வைத்து வருகின்றனர்.
இதுதவிர, மின்கம்பங்களிலும், தனியார் கல்வி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் விளம்பர பலகைகளை வைத்து வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதுடன், பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கடந்த 14ம் தேதி திருவள்ளூர் ஜே.என்.சாலையில், தனிநபர் ஒருவரின் பிறந்த நாள் விளம்பரம், அம்பேத்கர் சிலையில் இருந்து காமராஜர் சிலை வரை, 1.5 கி.மீ.,க்கு வைக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இது குறித்து, பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததும், நகராட்சி கமிஷனர், பிறந்த நாள் கொண்டாடியவர் மற்றும் அதை அச்சடித்த மூன்று அச்சக உரிமையாளர் என, நால்வர் மீது, திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளம்பர பலகை அமைக்க விரும்பினால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற வேண்டும் என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில், விளம்பர பலகைகளை அமைக்க விரும்பினால், மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர், பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம், 15 நாட்களுக்கு முன், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
அனுமதி கோரும் இடம் தனியார் நிலமாக இருப்பின் நில உரிமையாளரிடமும், அரசு இடமாக இருப்பின், சம்பந்தப்பட்ட துறையினரிடமும் அனுமதி பெற வேண்டும். மேலும், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்திலும், தடையில்லா சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்களில், அவற்றின் விபரம் மற்றும் அச்சகதாரர் விபரம் இடம்பெற வேண்டும். மேலும், முன் அனுமதி பெறாமல் பேனர் வைத்தால், ஓராண்டு சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், அனுமதி காலம் முடிந்தும் அகற்றாவிட்டால், துறை அலுவலர்களால் அகற்றப்பட்டு, அதற்கான கட்டணத்தை, சம்பந்தப்பட்டவரிடம் இருந்து வசூல் செய்யப்படும். பொது சொத்துக்கு சேதம் ஏற்பட்டாலோ, விபத்து மரணம் மற்றும் காயம் ஏற்பட்டாலோ, விண்ணப்பதாரர் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடவடிக்கை தொடர வேண்டும் திருவள்ளூர் மாவட்டத்தில், விளம்பர பேனர் அமைத்தவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்த நிர்வாகம், தற்போது அதிரடியாக காவல் துறையினர் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே போல், அரசியல் கட்சி கூட்டங்கள் நடைபெறும் போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வித்தியாசம் பார்க்காமல், சாலையோரம் விளம்பர பலகை, சாலை மையத்தடுப்பில் கட்சி கொடி அமைப்போர் மீதும், கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், விளம்பர பலகை அமைப்போர் மீதான இந்த அதிரடி நடவடிக்கை தொடர வேண்டும். - சமூக ஆர்வலர்கள், திருவள்ளூர்.

