/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெயிலை சமாளிக்க கலெக்டர் ஆலோசனை
/
வெயிலை சமாளிக்க கலெக்டர் ஆலோசனை
ADDED : மார் 27, 2025 08:38 PM
திருவள்ளூர்:கோடைவெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, கலெக்டர் ஆலோசனை வழங்கி உள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில், மார்ச்- ஜூன் வரை வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மதியம் 12:00-மாலை 4:00 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். வெப்ப சோர்வு அறிகுறிகளான, அதிக வியர்வை, தலை சுற்றல், லேசான தலைவலி, குமட்டல் உள்ளிட்டவை ஏற்படலாம்.
எனவே, வெயிலில் செல்லும் பொதுமக்கள், பழம், இளநீர் போன்ற நீர்ச்சத்து உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். லேசான பருத்தி ஆடை அணிய வேண்டும். வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல வேண்டும்.
கர்ப்பிணியர் வெயிலில் செல்வதை தவிர்க்கவும். காலை 10:00-மாலை 4:00 மணி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், சந்தைகளை தவிர்க்கலாம். வெப்ப நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ்., விநியோகிக்கப்படுகிறது. கோடையில் பரவும் அம்மை நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.