/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
/
ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
ஊத்துக்கோட்டையில் தொடரும் நெரிசல் காற்றில் பறக்கும் கலெக்டர் உத்தரவு
ADDED : ஜூலை 11, 2025 01:08 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டு உள்ளதால் ஏற்படும் நெரிசலால் மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம், மஞ்சங்காரணி, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை மற்றும் இணைப்பு சாலைகள் வழியே, 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஆந்திர மாநிலம், திருப்பதி, கடப்பா, கர்னுால், நந்தியால் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் மேற்கண்ட பகுதிகள் வழியே செல்கின்றன. தினமும், 20,௦௦௦த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலை மார்க்கத்தில் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் சாலை 49 அடி உள்ளது. இதில், 30 அடிக்கு தார்ச்சாலை போடப்பட்டு உள்ளது. இரண்டு பக்கமும், தலா, 10 அடி துாரம் தார்ச்சாலை இல்லாமல் மண் சாலையாக உள்ளது.
வியாபாரிகள் தார்ச்சாலை வரை தான் நெடுஞ்சாலைக்கு சொந்தம் என கருதி, இரண்டு பக்கமும் உள்ள மண்சாலையை ஆக்கிரமித்து கடை  வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
இதனால் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் 2 கி.மீ.,  துாரத்திற்கு வரிசையில் நிற்கின்றன. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை.
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.
ஆடி மாதம் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
அப்போது நாள் முழுக்க நெரிசல் ஏற்படும். ஆய்வுப் பணிக்காக கலெக்டர் பிரதாப் ஊத்துக்கோட்டை வந்த போது, நெரிசல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பேரூராட்சி, காவல் துறை அதிகாரிகளிடம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என, கூறினார்.
ஆனால் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர்.

