/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலுக்கு கொசஸ்தலை குடிநீர் தட்டுப்பாட்டிற்கு விரைவில்! தீர்வு காண ரூ.10 கோடியில் திட்டப்பணி
/
திருத்தணி முருகன் கோவிலுக்கு கொசஸ்தலை குடிநீர் தட்டுப்பாட்டிற்கு விரைவில்! தீர்வு காண ரூ.10 கோடியில் திட்டப்பணி
திருத்தணி முருகன் கோவிலுக்கு கொசஸ்தலை குடிநீர் தட்டுப்பாட்டிற்கு விரைவில்! தீர்வு காண ரூ.10 கோடியில் திட்டப்பணி
திருத்தணி முருகன் கோவிலுக்கு கொசஸ்தலை குடிநீர் தட்டுப்பாட்டிற்கு விரைவில்! தீர்வு காண ரூ.10 கோடியில் திட்டப்பணி
ADDED : நவ 14, 2025 08:57 PM

திருத்தணி, - திருத்தணி முருகன் கோவிலில் குடிநீர் பிரச்னை நிரந்தர தீர்வு காண, 10.60 கோடி ரூபாய் மதிப்பில், நல்லாட்டூர் கொசஸ்தலை ஆற்றில் இருந்து, 16 கி.மீ.,க்கு குழாய் பதித்து, மலைக்கோவிலுக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை, தமிழ்நாடு குடிநீர் வாரியத்திடம் ஒப்படைத்து, நான்கு மாதத்தில் முடிக்க கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில் மூன்று இடங்களில் தங்கும் விடுதிகள் மற்றும் நான்கு திருமண மண்டபங்கள் குறைந்த வாடகையில் விடப்படுகின்றன.
தற்போது கோவில் தலைமை அலுவலகம் அருகே, 45 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து திருமண மண்டபங்கள், கோவில் ஊழியர்களுக்கு நிர்வாக பயிற்சி பள்ளி போன்ற கட்டட பணிகள், 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும்.
தேவஸ்தான விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு, தெக்களூர் பாபிரெட்டிப்பள்ளி அருகே, முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் மண்டபம் பகுதியில், ஆழ்துளை கிணறுகள் மற்றும் தரைமட்ட கிணறுகள் அமைத்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
ஆனால், அங்கு போதிய அளவுக்கு தண்ணீர் கிடைக்காததால், மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான விடுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், முருகன் கோவிலில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, 16 கி.மீ.,யில் உள்ள நல்லாட்டூர் கொசஸ்தலை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு, கோவில் நிர்வாகம் புதிய திட்டம் வகுத்துள்ளது.
இதுகுறித்து, திருத்தணி கோவில் அதிகாரி கூறியதாவது:
திருத்தணி முருகன் மலைக்கோவில் மற்றும் தேவஸ்தான விடுதிகளுக்கு, தினமும் 2.50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. முக்கிய விசேஷ நாட்களில், 5 - 7.50 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படும்.
தற்போது, முருகன் மலைக்கோவிலில் நிலவி வரும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, நல்லாட்டூர் கொசஸ்தலை ஆற்றில், 10.60 கோடி ரூபாய் மதிப்பில், மூன்று ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும்.
அங்கிருந்து, குழாய் மூலம் தணிகை இல்லம், கார்த்திகேயன் இல்லம் மற்றும் தெக்களூர் ஆகிய இடங்களில், தலா 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டிகள் கட்டப்பட்டு, குடிநீர் சேமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தொட்டிகளுக்கு, நல்லாட்டூரில் ராட்சத மின்மோட்டார்கள் அமைத்து, தண்ணீர் கொண்டு வரப்படும். பின், குடிநீர் அனைத்து இடங்களும் பகிர்ந்து வழங்கப்படும். மேலும், கொசஸ்தலை ஆற்றில் அமையவுள்ள ஆழ்துளை கிணறுகளை சுற்றியும், 40 அடி ஆழத்திற்கு கான்கிரீட் உறைகள் கட்டப்படும்.
இந்த கிணறுகள் மூலம் தினமும் குறைந்தபட்சம், 5.50 - 10 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் கொண்டு வரப்படும். இப்பணிகள் தமிழ்நாடு குடிநீர் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளோம்.
இப்பணிகளுக்கு ஓரிரு நாளில், அரசு நிர்வாக அனுமதி கிடைத்து விடும். அதன்பின், நான்கு மாதத்திற்குள் பணிகள் முடித்து, தண்ணீர் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

