/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முடங்கியுள்ள எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்தை தனியார் வாயிலாக செயல்படுத்த ஆணையம் அனுமதி
/
முடங்கியுள்ள எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்தை தனியார் வாயிலாக செயல்படுத்த ஆணையம் அனுமதி
முடங்கியுள்ள எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்தை தனியார் வாயிலாக செயல்படுத்த ஆணையம் அனுமதி
முடங்கியுள்ள எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்தை தனியார் வாயிலாக செயல்படுத்த ஆணையம் அனுமதி
ADDED : நவ 26, 2025 05:06 AM
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில், ஏழு ஆண்டுகளாக முடங்கியுள்ள, 660 மெகா வாட் திறன் உடைய எண்ணுார் விரிவாக்க அனல்மின் திட்டத்தை, தனியார் நிறுவனமே அமைத்து, பராமரிக்கும் வகையில், 'டெண்டர்' கோர மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை அடுத்த எர்ணாவூரில், 660 மெகா வாட் திறனில் எண்ணுார் விரிவாக்க அனல்மின் நிலையம் அமைக்கும் பணியை, 'லேன்கோ' என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, 2014ல் மின் வாரியம் துவக்கியது.
திட்ட செலவு, 3,921 கோடி ரூபாய். ஒப்பந்த நிறுவனம், நிதி நெருக்கடியில் சிக்கியதால், 18 சதவீத பணிகளுடன் மின் திட்டம், 2018ல் முடங்கியது. மீதமுள்ள பணிகளை மேற்கொள்ளும் ஆணை, பி.ஜி.ஆர்., நிறுவனத்திடம், 2022 மார்ச்சில் வழங்கப்பட்டது. திட்ட செலவு, 4,442 கோடி ரூபாய்.
அந்நிறுவனம் பணிகளை துவக்காமல் தாமதம் செய்ததால், ஒப்பந்த ஆணை அடுத்த ஆண்டிலேயே ரத்து செய்யப்பட்டது. தற்போது, மின் திட்டத்தை முடிக்க, 5,421 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால், எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்தை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது. இதற்கு, ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த ஆணையம், கட்டண அடிப்படையிலான போட்டி ஏல முறையில் டெண்டர் கோரி, எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்தை, 'வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, சொந்தமாக இயக்குதல்' முறையில் தனியார் நிறுவனம் வாயிலாக செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முதலில் தனியார் நிறுவனம், கட்டுமான பணிகளை முடித்து, மின் வாரியத்திடம் ஒப்படைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது.
தற்போது, எண்ணுார் மின் திட்டத்தை, தனியார் நிறுவனமே அமைத்து, பராமரிக்கும் வகையில், சர்வதேச 'டெண்டர்' கோரப்படும். அந்நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை, மின் வாரியம் வாங்கும்.
டெண்டரில் ஒரு யூனிட்டிற்கு குறைந்த விலைக்கு, மின்சாரம் வழங்க முன் வரும் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்படும். ஏற்கனவே முடிந்துள்ள பணிகள் போக, உள்ளது உள்ளபடி என்ற அடிப்படையில், திட்ட பணிகளை தனியார் நிறுவனம் துவக்க வேண்டும்.
அதற்கான இடத்தை, மின் வாரியம் குத்தகைக்கு வழங்கும். ஒப்பந்தம் வழங்கப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்க வேண்டும்.
அதனிடம் இருந்து, 30 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்யும். ஆணைய அனுமதியை அடுத்து, விரைவில் டெண்டர் கோரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

