
அரசு பள்ளி வளாகத்தில்
நாய்கள் தொல்லை
திருவாலங்காடு ஒன்றியம் காவேரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது அருந்ததியர் காலனி. இங்கு, அரசு துவக்கப் பள்ளியில், 30 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக பள்ளி வளாகத்தில், 10க்கும் மேற்பட்ட நாய்கள் முகாமிட்டுள்ளன. இந்த நாய்கள் மாணவர்களை கடிக்கும் அபாயம் உள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே, பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து சுற்றி வரும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எஸ்.சிவராமன், காவேரிராஜபுரம்.
நிழற்குடை ஆக்கிரமிப்பு அகற்ற
பஸ் பயணியர் காத்திருப்பு
திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை பஜாரில், 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து, தினமும் அதிகாலை 5:00 முதல் நள்ளிரவு 11:00 மணி வரை, 100க்கும் மேற்பட்ட பயணியர் இருப்பர்.
இந்நிலையில், பேருந்து நிழற்குடை முன் ஆக்கிரமித்து சிலர் தேங்காய், பூ மற்றும் டிபன் கடை வைத்துள்ளனர். இதனால், பேருந்து நிழற்குடைக்குள் செல்ல முடியாமல் மழை, வெயிலில் காத்திருந்து, பேருந்து வந்ததும் ஏறிச் செல்கின்றனர். எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.ராகவன், கே.ஜி.கண்டிகை.
நல்லாங்குளம் படுமோசம்
சீரமைப்பது எப்போது?
திருத்தணி அடுத்த மேல்திருத்தணியில் நல்லாங்குளம் உள்ளது. இந்த குளத்தை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.
ஆண்டுதோறும் முருகன் கோவிலில் நடக்கும் ஆடிக்கிருத்திகை விழா மற்றும் படித்திருவிழா ஆகிய நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் நல்லாங்குளத்தில் புனித நீராடி, பின் படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று முருகப் பெருமானை வழிபடுவர்.
தற்போது, நல்லாங்குளம் படிகளில் செடிகள் வளர்ந்தும், பல இடங்களில் சேதமடைந்தும் உள்ளன. எனவே, நகராட்சி நிர்வாகம் நல்லாங்குளத்தை சீரமைத்து, படிகளில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். மேலும், நீர்வரத்து பாதையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -எஸ்.பழனிகுமார், மேல்திருத்தணி.
மழைநீர் சேகரிக்கும் இடமான
நசரத்பேட்டை சாலை
திருமழிசை அடுத்த பூந்தமல்லி ஒன்றியத்தில் நசரத்பேட்டை உள்ளது. இங்குள்ள 5வது வார்டுக்குட்பட்ட பக்தவச்சலம் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கால்வாய் இல்லாததால், சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பகுதிவாசிகள் மற்றும் பள்ளி கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைத்து, கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பா.பூபாலன், திருமழிசை.
பிளாஸ்டிக் கழிவால் நிரம்பிய
கழிவுநீர் கால்வாயால் அவதி
ஊத்துக்கோட்டை பேரூராட்சி, நாகலாபுரம் சாலையில் உள்ளது டி.எஸ்.பி., அலுவலகம். இதன் அருகே காவலர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் சேர்ந்துள்ளதால், அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு, அடைப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.ரமேஷ்பாபு, ஊத்துக்கோட்டை.

