/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புகார் பெட்டி: ஊத்துக்கோட்டையில் தெரு நாய்களால் அச்சம்
/
புகார் பெட்டி: ஊத்துக்கோட்டையில் தெரு நாய்களால் அச்சம்
புகார் பெட்டி: ஊத்துக்கோட்டையில் தெரு நாய்களால் அச்சம்
புகார் பெட்டி: ஊத்துக்கோட்டையில் தெரு நாய்களால் அச்சம்
ADDED : நவ 21, 2024 02:35 AM

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பஜார், நாகலாபுரம், திருவள்ளூர், சத்தியவேடு சாலைகளில் தெரு நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன.
இந்த நாய்கள் தெருக்களில் நடந்து செல்வோரை கடிக்க முற்படுகின்றன. மேலும், வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிக்க பாய்கின்றன. எனவே, பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
- வி.ரஞ்சித், ஊத்துக்கோட்டை.
பள்ளி அருகே முள்செடி
சீரமைக்க எதிர்பார்ப்பு
திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ - -மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி கட்டடத்தின் அருகே முள்செடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.
மேலும், முட்புதரில் இருந்து விஷ ஜந்துக்கள் ஜன்னல் வழியாக வகுப்பறைக்குள் நுழைவதற்கு வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் புகுந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகம் பள்ளி அருகே வளர்ந்துள்ள முள்புதர்களை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.வெங்கடேசன், கார்த்திகேயபுரம்.
மின்மாற்றியின் கம்பங்கள் சேதம்
புதிதாக அமைப்பது எப்போது?
பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உள்ள கீழப்பூடி சாலையில் இரண்டு மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.
இதில், ஒரு மின்மாற்றியின் கம்பங்கள் சேதமடைந்து உள்ளன. இதனால், மின்மாற்றி எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாய நிலை உள்ளது.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், மின்மாற்றியின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-- எஸ்.உமாபதி, சொரக்காய்பேட்டை.
சரியான நேரத்தில்
ரேஷன் கடை இயங்குமா?
பூந்தமல்லி ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் ரேஷன் கடையில், 750 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த ரேஷன் கடை, காலை 10:30 மணிக்கு மேல் திறந்து, மாலை 4:00 மணிக்கு மூடப்படுகிறது.
இதனால், இப்பகுதியைச் சேர்ந்தோர் அரிசி, பருப்பு சர்க்கரை போன்ற பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ரேஷன் கடையில், இருப்பு விபரம், புகார் செய்யும் தொலைபேசி எண் உள்ளிட்ட எவ்வித விபரமும் இல்லை.
ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடை திறக்க உத்தரவு இருந்தும், ரேஷன் கடை திறக்கப்படுவதில்லை. எனவே, உணவு பொருள் வழங்கல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--- ந.கோதைஜெயராமன், நசரத்பேட்டை.
புதர்கள் சூழ்ந்த
கோவில் பாதை
கவரைப்பேட்டை அடுத்த மேல்முதலம்பேடு கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கான பாதை, பேவர் பிளாக் சாலையாக மாற்றப்பட்டது.
தற்போது, இச்சாலையை மறைக்கும் அளவிற்கு புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, உடனடியாக புதர்களை அகற்ற மேல்முதலம்பேடு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோவில் அமைந்துள்ள பகுதி, மழைக்காலங்களில் சகதியாக மாறுவதால், அப்பகுதியில் மழைநீர் தேங்காதபடி தரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆர்.சக்திவேல், கவரைப்பேட்டை.