/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் நகராட்சி பள்ளி கட்டுமான பணியில் தரமில்லா பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்
/
திருவள்ளூர் நகராட்சி பள்ளி கட்டுமான பணியில் தரமில்லா பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்
திருவள்ளூர் நகராட்சி பள்ளி கட்டுமான பணியில் தரமில்லா பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்
திருவள்ளூர் நகராட்சி பள்ளி கட்டுமான பணியில் தரமில்லா பொருட்கள் பயன்படுத்துவதாக புகார்
ADDED : ஏப் 29, 2025 11:36 PM

திருவள்ளூர், திருவள்ளூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்கள் தரமில்லை என, புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில் நான்கு துவக்க பள்ளி, மூன்று நடுநிலை பள்ளி, ஒரு உயர்நிலை மற்றும் இரண்டு மேல்நிலை பள்ளி என மொத்தம், 10 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு, 3,500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
இதில், ராஜாஜி சாலையில் உள்ள வளாகத்தில் துவக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில், 900க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இதே வளாகத்தில் சத்துணவு மையம் மற்றும் அங்கன்வாடியும் உள்ளது.
மிகவும் குறுகலான இடத்தில் மூன்று பள்ளிகள் மற்றும் ஒரு சத்துணவு மையம் இயங்கி வருவதால், மாணவ - மாணவியர் வகுப்பறையில், நெருக்கமாக அமர்ந்து பாடம் பயின்று வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு தாலுகா அலுவலகம் அருகில், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 50 சென்ட் அரசு நிலத்தில், புதிய நகராட்சி மேல்நிலை பள்ளி கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
தரை, முதல் மற்றும் இரண்டாம் தளம் என, மூன்று அடுக்கு கட்டடம், 6 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. புதிதாக அமையவுள்ள பள்ளியில், மாணவ - மாணவியருக்கு விசாலமான வகுப்பறை, ஆய்வகம், நுாலகம் மற்றும் விளையாட்டு திடல் ஆகிய வசதிகள் இடம்பெறும்.
மூன்று மாதத்திற்குள் பணி முடிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கல், எம் - சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் தரமில்லாமல் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எம் - சாண்ட் மணல் மிகவும் கறுப்பாகவும், செங்கல் உடைந்து, சேதமடைந்தும் உள்ளது. இதனால், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, தரமான பொருட்களை வைத்து பள்ளி கட்டடத்தை கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.