/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கூட்டுறவு சாலை ஜப்தி? விவசாயிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்
/
திருத்தணி கூட்டுறவு சாலை ஜப்தி? விவசாயிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்
திருத்தணி கூட்டுறவு சாலை ஜப்தி? விவசாயிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்
திருத்தணி கூட்டுறவு சாலை ஜப்தி? விவசாயிகள் எதிர்த்து ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2025 02:15 AM

திருத்தணி:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை, தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் சார்பில், 'ஜப்தி' நடவடிக்கை எடுக்க உள்ளதாக வந்த தகவலையடுத்து, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சர்க்கரை ஆலை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இங்கு, அரக்கோணம், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு வரவழைத்து அரவை செய்யப்படுகிறது.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த, 1994ம் ஆண்டு தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் வாயிலாக, 5.2 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு சமரச கடன் தீர்ப்பாயம் மூலம், 9.5 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் சார்பில், ஏற்கனவே கட்டியது வட்டி தொகை மட்டுமே. தற்போது, அசல் மற்றும் வட்டி தொகை, 10 கோடி ரூபாய் கட்ட வேண்டும். இல்லையென்றால், கூட்டுறவு சர்க்கரை ஆலை 'ஜப்தி' செய்யப்படும் என கூறியது.
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகத்தின் செயலை கண்டித்து நேற்று, விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர், ஆலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலர் துளசி நாராயணன் கூறியதாவது:
சமரச கடன் தீர்ப்பாயத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கடன் தொகை செலுத்திய பின்பும், மீண்டும் கடன் தொகை கட்ட வேண்டும் என, தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம் கூறுவது, ஆலையை மூடுவதற்கு வழிவகுக்கும்.
இதனால், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பங்குதாரராக உள்ள 45,000 கரும்பு விவசாயிகள் பாதிக்கப்படுவர். இது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதிகாரிகள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபடுவதை, மத்திய - மாநில அரசுகள் தடுக்க வேண்டும்.