/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோர ஆக்கிரமிப்பால் நெரிசல் ஆம்புலன்ஸ்கள் சிக்கியதால் பரபரப்பு
/
சாலையோர ஆக்கிரமிப்பால் நெரிசல் ஆம்புலன்ஸ்கள் சிக்கியதால் பரபரப்பு
சாலையோர ஆக்கிரமிப்பால் நெரிசல் ஆம்புலன்ஸ்கள் சிக்கியதால் பரபரப்பு
சாலையோர ஆக்கிரமிப்பால் நெரிசல் ஆம்புலன்ஸ்கள் சிக்கியதால் பரபரப்பு
ADDED : ஏப் 20, 2025 01:06 AM

ஊத்துக்கோட்டை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில், சாலையோர ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட நெரிசலில் நோயாளிகளை ஏற்றிச் சென்ற இரண்டு ஆம்புலன்ஸ்கள் சிக்கியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் தாலுகா அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.
சென்னையில் இருந்து ஆந்திராவின் பிச்சாட்டூர், புத்துார், நகரி, திருப்பதி, கடப்பா, கர்நுால், நந்தியால், ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.
வாகன போக்குவரத்து, மக்கள் நெருக்கடி மற்றும் சாலையோர வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றால், இங்கு போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக, சென்னை - திருப்பதி சாலை, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் வந்ததால், சாலை விரிவாக்கம் மற்றும் தரமான தார்சாலை அமையும் என எதிர்பார்த்த பகுதிவாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
கடந்த மாதம், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் வாயிலாக, ஊத்துக்கோட்டை அரசு தொடக்கப் பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் பிரதாப்பிடம் செய்தியாளர்கள், போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு, கலெக்டர் பிரதாப், 'ஊத்துக்கோட்டை காவல் துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளை அழைத்து நெரிசல் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்று மதியம் நோயாளிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த இரண்டு ஆம்புலன்ஸ்கள், பஜாரில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கியதால் பதற்றமான சூழல் நிலவியது. பின், ஒருவழியாக இரண்டு வாகனங்களும் சென்றன.
எனவே, கலெக்டர் உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதற்கு தீர்வு ஏற்படும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.