/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றில் மேலும் ஒரு தடுப்பணை கட்ட...திட்டம்:அம்மப்பள்ளி அணைக்கட்டு தண்ணீர் தேக்க முடிவு
/
கொசஸ்தலை ஆற்றில் மேலும் ஒரு தடுப்பணை கட்ட...திட்டம்:அம்மப்பள்ளி அணைக்கட்டு தண்ணீர் தேக்க முடிவு
கொசஸ்தலை ஆற்றில் மேலும் ஒரு தடுப்பணை கட்ட...திட்டம்:அம்மப்பள்ளி அணைக்கட்டு தண்ணீர் தேக்க முடிவு
கொசஸ்தலை ஆற்றில் மேலும் ஒரு தடுப்பணை கட்ட...திட்டம்:அம்மப்பள்ளி அணைக்கட்டு தண்ணீர் தேக்க முடிவு
ADDED : பிப் 27, 2025 01:50 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அருகே செல்லும் கொசஸ்தலை ஆற்றுப் பகுதியில், ஏற்கனவே இரண்டு தடுப்பணைகள் கட்டியுள்ள நிலையில், மூன்றாவது தடுப்பணை, 22 கோடி ரூபாய் மதிப்பில், கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்தும் நிதியுதவி வழங்குமாறு நீர்வளத் துறையினர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அடுத்த மாதம் பட்ஜெட்டில் நிதி ஓதுக்கீடு வரும் பட்சத்தில், பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, ஒராண்டிற்குள் புதிய தடுப்பணை கட்டி தண்ணீர் சேமிக்க தீர்மானித்துள்ளோம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் புள்ளூர் பகுதியில் லவா ஆறும், கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணைக்கட்டு பகுதியில் இருந்து, குசா ஆறும் தனித்தனியாக உருவாகி, திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் பகுதியில் உள்ள உயர்மட்ட பாலம் அருகே இரு ஆறுகளும் ஒன்றாக இணைந்து கொசஸ்தலை ஆறாக உருவாகிறது. அங்கிருந்து புண்ணியம், சொராக்காய்பேட்டை குமாரமங்கலம் ஆகிய பகுதியில் மீண்டும் ஆந்திர மாநிலம் நகரி, சத்திரவாடா வழியாக மீண்டும் திருவள்ளூர் மாவட்டம் நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, லட்சுமாபுரம், நாராயணபுரம் வழியாக பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்தடைகிறது.
இந்த கொசஸ்தலை ஆற்றில் பள்ளிப்பட்டு மற்றும் சொரக்காய்பேட்டை பகுதிகளில் ஏற்கனவே தமிழக பொதுப் பணி துறை சார்பில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த தடுப்பணைகள், 200 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் கொண்டவை. இந்த தடுப்பணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதால், பள்ளிப்பட்டு முதல் சொரக்காய்பேட்டை வரையிலான பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்கிறது.
மேலும், 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், குடிநீர் பிரச்னை தீர்க்கப்படுகிறது. இதுதவிர, பொதட்டூர்ராபேட்டை பேரூராட்சிக்கும் கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளைகள் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், திருத்தணி நீர்வளத் துறையினர் புண்ணியம் அடுத்த, குமாரமங்கலம் பகுதியில், மேலும் ஒரு தடுப்பணை கட்டுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்காக, நீர்வளத் துறை அதிகாரிகள், ''உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், மூன்றாவது தடுப்பணை கட்டுவதற்கு, 22 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்தும், நிதி ஓதுக்கீடு கேட்டு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த தடுப்பணை, 270 மீட்டர் அகலம், 1.5 மீட்டர் உயரம் கொண்டதாகவும் அமையும். இதில், தடுப்பணையில் இருந்து 800 மீட்டர் துாரத்திற்கு , 0.16 மில்லியன் கன அடிதண்ணீர் தேக்கி வைக்கும் வகையில் தடுப்பணை உருவாக்கப்படவுள்ளது.
இது குறித்து திருத்தணி நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கொசஸ்தலை ஆற்றில் குமாரமங்கலம் பகுதியில் புதியதாக தடுப்பணை ஒன்று கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான திட்ட மதிப்பீடு மற்றும் தடுப்பணை வடிவம் தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம்.
அதாவது, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தில், 22 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குமாறு அனுப்பியுள்ளோம். அடுத்த மாதம், தமிழக பட்ஜெட்டில் நிதி ஓதுக்கீடு செய்வதற்கு அதிகளவில் வாய்ப்புகள் உள்ளதால், தடுப்பணை பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, ஒராண்டிற்குள் புதிய தடுப்பணை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த தடுப்பணையால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக உயரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.