ADDED : டிச 08, 2024 02:44 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பெரியகளக்காட்டூரில், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி, 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், ஜே.எஸ்.ராமாபுரம், சின்னகளக்காட்டூர், பெரியகளக்காட்டூர் கிராமங்களில் இருந்து 120 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
பள்ளி கட்டடம், 2019ம் ஆண்டு சேதமடைந்ததால், தற்காலிகமாக 5 ஆண்டுகளாக மாணவர் விடுதியில் செயல்பட்டு வருகிறது.
தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் புதிய பள்ளி கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். கடந்தாண்டு புதிய பள்ளி கட்டடம் அமைக்க, ஆதிதிராவிட நலத்துறை சார்பில், 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, பள்ளியின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது.
ஓராண்டாக பள்ளி கட்டடம் கட்டப்படும் நிலையில் பணி முடியாததால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளி கட்டடப் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி கட்டடப் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் மீதமுள்ள பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்' என்றார்.