/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொல் பொருட்கள் மாயமானதாக அதிகாரி புகாரால் சர்ச்சை! அரசியல்வாதி போல் பேசுவதாக அறிஞர்கள் கொதிப்பு
/
தொல் பொருட்கள் மாயமானதாக அதிகாரி புகாரால் சர்ச்சை! அரசியல்வாதி போல் பேசுவதாக அறிஞர்கள் கொதிப்பு
தொல் பொருட்கள் மாயமானதாக அதிகாரி புகாரால் சர்ச்சை! அரசியல்வாதி போல் பேசுவதாக அறிஞர்கள் கொதிப்பு
தொல் பொருட்கள் மாயமானதாக அதிகாரி புகாரால் சர்ச்சை! அரசியல்வாதி போல் பேசுவதாக அறிஞர்கள் கொதிப்பு
UPDATED : செப் 30, 2025 01:53 AM
ADDED : செப் 30, 2025 01:52 AM

- நமது நிருபர் -
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரத்தில் அகழாய்வு செய்யப்பட்டு, சென்னை பல்கலையின் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மாயமாகி விட்டதாக, பிரபல தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம், ஆதாரங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டை வைக்க வேண்டும்; அரசியல்வாதிபோல பரபரப்புக்காக பேசக்கூடாது என, தொல்லியல் அறிஞர்கள் கொதிப்படைந்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை சார்பில், சிவகங்கை மாவட்டம், கீழடியில், 2014, 2015ம் ஆண்டுகளில், இரண்டு கட்டங்களாக தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வுகள் நடந்தன.
பின், அப்பணிகள் கைவிடப்பட்டு, அவர் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார். அவர் எழுதிய அகழாய்வு அறிக்கையை, மத்திய தொல்லியல் துறை, திருத்தி கேட்டதாக கூறி, பரபரப்பை கிளப்பி உள்ளார்.
அதிர்ச்சி இது, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் கலாசார, அரசியல் போராக வெடித்துள்ளது.
இந்நிலையில், மதுரையில் சில நாட்களுக்கு முன், தனியார் அமைப்பின் சார்பில் நடந்த வரலாற்று கருத்தரங்கில், அமர்நாத் ராமகிருஷ்ணன், அதிர்ச்சி தரும் வகையிலான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதுகுறித்து, அவர் பேசியதாவது:
சென்னை பல்கலை தொல்லியல் துறை சார்பில், 1975 - 1982 வரை காஞ்சிபுரத்தில் பல கட்டங்களாக அகழாய்வுகள் நடந்தன. ஆனால், காஞ்சிபுரம் பற்றிய செய்திகள் யாருக்கும் தெரியாது.
காரணம், அகழாய்வுகள் குறித்த சிறு சிறு செய்திகள் மட்டுமே வெளிவந்துள்ளதே தவிர, முழு அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அதை, யாரும் இதுவரை கேட்கவில்லை.
அங்கு வேலை செய்த, பேராசிரியர் குருமூர்த்தி, 'செராமிக் டிரடிஷன் ஆப் சவுத் இண்டியா' என்ற புத்தகத்தை எழுதினார்.
அந்த புத்தகத்தில், 'சிந்துவெளி அகழாய்வில் கிடைக்கும் கருப்பு - சிவப்பு பானை ஓடுகள் நாடு முழுதும் கிடைக்கும். ஆனால், காஞ்சிபுரத்தில் மட்டும் கிடைக்காது. காரணம், காஞ்சிபுரம் சங்க கால நகரம் கிடையாது. பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட நகரம்.
'அதனால்தான், அதை வேதகால மக்கள் கொண்டாடுகின்றனர். காஞ்சிபுரத்தை, 'கடிகாஸ்தானம்' என்பர். அப்படி என்றால், வேதபாடசாலைகள் உருவாக்கப்பட்ட இடம் என்று பொருள். 'பழைய செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருங்கற்கால சின்னங்கள், கருப்பு - சிவப்பு பானை ஓடுகளும் கிடைக்கின்றன.
'ஆனால், காஞ்சிபுரத்தில் மட்டும், ஒரு கருப்பு - சிவப்பு பானை ஓடு கூட கிடைக்கவில்லை' என, குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற பழைய வரலாறுகள் எதுவும் வெளிவராத காரணத்தால்தான், நம் வரலாற்றை மீட்டெடுக்க முடியாமல் தவிக்கிறோம்.
பயப்படவில்லை காஞ்சிபுரம் என்பது ஒரு பவுத்த கால நகரம். இன்றைய காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அருகில்தான் அகழாய்வு நடந்தது.
அதில், பவுத்த ஸ்துாபம் வெளிப்பட்டது. அதன்மேல்தான், இன்றைய கோவில் கட்டப்பட்டு உள்ளது.
அந்த பவுத்த ஸ்துாபம் பற்றிய அகழாய்வு செய்திகள் வெளியாகவில்லை. அந்த அகழாய்வு அறிக்கை வந்திருந்தால், தமிழக வரலாறு மாறி இருக்கும்.
காஞ்சிபுரம் அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்களை, சென்னை பல்கலையில் போய் தேடிப்பார்த்தால் ஒன்றும் கிடைக்காது. காரணம், அவை மண்ணோடு மண்ணாகி விட்டன.
அப்படிப்பட்ட நிலை கீழடிக்கு வந்துவிடக் கூடாது; அதுபற்றி மக்களுக்கு தெரிவிக்க போராடுகிறோம். யாரைப் பற்றியும் நாங்கள் பயப்படவில்லை.
தமிழகத்தில் எத்தனை அகழாய்வுகள் நடந்தன. அவற்றைப்பற்றி மக்களுக்கு தெரியாது.
ஆனால், கீழடிக்கு வந்தவர்களுக்கு நாங்கள் தகவல்களை வெளியிட்டதால்தான், இன்று கீழடி வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.