/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
/
கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தம் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு
ADDED : அக் 08, 2025 02:22 AM

பொன்னேரி:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், விவசாயிகள் பயிர் கடன் பெற முடியாமலும், விவசாய இடுபொருட்களை வாங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 124 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன.
இவற்றில், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என, இரண்டு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், இவற்றின் கீழ், 1,108 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
விவசாய பணி பாதிப்பு
இந்நிலையில், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரு தினங்களாக, 'டாக்பியா' எனப்படும் தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
இதன் காரணமாக, கூட்டுறவு கடன் சங்கங்கள், ரேஷன் கடைகள் மூடிக்கிடக்கின்றன. தற்போது, விவசாயிகள் சம்பா பருவத்திற்கு நடவு, களை பறிப்பது, மருந்து தெளிப்பது என, விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகளுக்காக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் பெறுவர். மேலும், விவசாயத்திற்கு தேவையான உரம், யூரியா மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்குவர்.
மக்கள் தவிப்பு
இந்நிலையில், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூடி கிடப்பதால், விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல், ரேஷன் கடைகளும் பூட்டிக் கிடப்பதால், பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், நகைக்கடன் பெற முடியாத நிலையில், கிராம மக்கள், தனியார் அடகு கடைகளை நாடி செல்கின்றனர்.
கூட்டுறவு சங்க ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்தால், விவசாயிகள், ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் கிராம மக்கள் பாதிக்கப்படுவர்.