ADDED : மார் 11, 2024 07:15 AM
கும்மிடிப்பூண்டி: சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில், சாலையில் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
அப்பகுதியில், மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் சாலையின் குறுக்கே நிற்பதும், மீடியனில் உள்ள புற்களை மேய்வதுவமாக சுற்றி திரிகின்றன.
சாலையின் குறுக்கே அவை வரும்போது, வாகன ஓட்டிகள் மிரண்டு போகும் நிலை ஏற்படுகிறது. தடுமாற்றத்துடன் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த வாகனத்தை தொடர்ந்து பின்னால் வரும் வாகனங்களும் தடுமாறுகின்றன.
இதனால் விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக, மாடுகளை பிடித்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.

