/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எளாவூரில் எடைமேடைகள் விரிசல் சோதனைசாவடியில் முறைகேடு
/
எளாவூரில் எடைமேடைகள் விரிசல் சோதனைசாவடியில் முறைகேடு
எளாவூரில் எடைமேடைகள் விரிசல் சோதனைசாவடியில் முறைகேடு
எளாவூரில் எடைமேடைகள் விரிசல் சோதனைசாவடியில் முறைகேடு
ADDED : செப் 30, 2025 12:59 AM

கும்மிடிப்பூண்டி;கும்மிடிப்பூண்டி அருகே மாநில எல்லையோர சோதனைச்சாவடி வழித்தடங்களில் உள்ள எடைமேடைகள் விரிசல் கண்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் சரக்கு வாகனங்களின் கூடுதல் எடை முறைகேடு, கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில், மாநில எல்லையோர சோதனைச்சாவடி அமைந்துள்ளது. ஆந்திரா, ஒடிசா, பீஹார், மத்தியபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள், மேற்கண்ட எளாவூர் சோதனைச்சாவடி வழியாக தமிழகம் வந்து செல்கின்றன.
அந்த சோதனைச்சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கடந்து செல்ல, 10 வழித்தடங்கள் உள்ளன. அவற்றில், எட்டு வழித்தடங்களில், எடை மேடை வசதி உள்ளது.
பொதுவாக கனரக வாகனங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சரக்கு கொண்டு செல்லும் போது, சில ஆவணங்களை உடன் எடுத்து செல்ல வேண்டும். அதில் ஒன்று, சரக்கின் எடை விபரம் அடங்கிய 'வேமண்ட் பில்' ஆகும்.
சம்பந்தப்பட்ட வாகனத்தில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக எடையை ஏற்றி சென்றால், போக்குவரத்து துறையினர் சார்பில் 'டன்னேஜ் வழக்கு' போட்டு அபராதம் வசூலிப்பது வழக்கம். அதை கண்டறிந்து எடை முறைகேடு செய்யும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதற்காக, எளாவூர் சோதனைச்சாவடி வழி தடங்களில் எடை மேடைகள் வைக்கப்பட்டன.
அந்த எடைமேடைகள் அனைத்தும் விரிசல் கண்டு பல ஆண்டுகளாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதனால், கனரக வாகனங்களின் வரும் சரக்கின் எடையை கண்டறிய முடியாத நிலையில், எடை முறைகேடு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையை சாதகமாக்கி, அங்குள்ள போக்குவரத்து துறை ஊழியர்கள், அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களிடம் வசூல் வேட்டை நடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
எட்டு எடை மேடை வழித்தடங்கள் அடைக்கப்பட்டிருப்பதால், ஒரு வழித்தடம் வழியாக மட்டுமே கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு நீண்ட வரிசையில் சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'சோதனைச்சாவடி வழிதடங்களில் உள்ள எடை மேடைகளை புதிதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் எடைமேடைகள் புதுப்பிக்கப்பட்டு சரக்கு வாகனங்களின் எடை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.