/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொசஸ்தலை ஆற்றுக்குள் மயானம் அரசு பணம் ரூ.5.50 லட்சம் வீண்
/
கொசஸ்தலை ஆற்றுக்குள் மயானம் அரசு பணம் ரூ.5.50 லட்சம் வீண்
கொசஸ்தலை ஆற்றுக்குள் மயானம் அரசு பணம் ரூ.5.50 லட்சம் வீண்
கொசஸ்தலை ஆற்றுக்குள் மயானம் அரசு பணம் ரூ.5.50 லட்சம் வீண்
ADDED : ஏப் 01, 2025 10:28 PM

தாமரைப்பாக்கம்:தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றுக்குள், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மயானம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இதனால், அரசு பணம் விரயமாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தாமரைப்பாக்கம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அம்மணம்பாக்கம் கிராம வாசிகள், தங்கள் கிராமத்தில் இறந்தவர்களின் உடலை, கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் அடக்கம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொசஸ்தலை ஆற்றில், மழை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த நேரத்தில், வெள்ளம் ஊருக்குள் புகாமல் இருக்க, ஆற்றின் இருபுறமும் கரை எழுப்பப்பட்டு உள்ளது. இதனால், ஆற்றின் நடுவில் மயானம் சென்று விட்டது.
மேலும், இறந்தோர் உடலை அடக்கம் செய்ய, கிராமவாசிகள் உயரமான கரையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. மழை காலத்தில் வெள்ளம் வந்தால், மயான இடம் முழுதும் வெள்ளத்தில் சூழ்ந்து மறைந்து விடும். அந்த சமயத்தில், கிராமவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 5.50 லட்சம் ரூபாய் மதிப்பில், மயான சுற்றுச்சுவர் மற்றும் எரிமேடை புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதனால், மழை காலத்தில் கிராமவாசிகளுக்கு பயன்படாத நிலையில், அரசு பணம் விரயமாக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, கிராமவாசிகளுக்கு பயன்பெறும் வகையில், மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.