திருத்தணி பஸ் நிலையத்தில் மீட்கப்பட்ட இருவர் உயிரிழப்பு
திருத்தணி பஸ் நிலையத்தில் மீட்கப்பட்ட இருவர் உயிரிழப்பு
UPDATED : ஆக 09, 2026 08:48 PM
ADDED : ஆக 09, 2026 08:32 PM
திருத்தணி: திருத்தணி பழைய பேருந்து நிலையத்தில், 57 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 80 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், 15 நாட்களுக்கு முன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். அங்கிருந்த பயணியர் அவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மரம் வெட்டிய போது பரிதாபம்:மயங்கி விழுந்த விவசாயி பலி
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் புதுமாவிலங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 53; விவசாய கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கரையில் முள் மரம் வெட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
***
பெண்ணின் ஸ்கூட்டரை திருடிய மர்மநபர்கள்
கும்மிடிப்பூண்டி: சென்னை, மணலியைச் சேர்ந்தவர் சாந்தி, 22. நேற்று முன்தினம் கவரைப்பேட்டையில் உள்ள தனியார் கல்லுாரி முன், 'யமஹா ரே இசட்ஆர்' ஸ்கூட்டரை நிறுத்தி, சான்றிதழ் பெறுவதற்காக கல்லுாரிக்குள் சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள், ஸ்கூட்டரை திருடி சென்றது தெரியவந்தது. வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
***
கடனை திரும்ப கேட்டவரை கம்பியால் தாக்கியவருக்கு வலை
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த வேலன்கண்டிகையைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 36. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த கோபி, 30, என்பவருக்கு, கடனாக பணம் கொடுத்துள்ளார். நேற்று முன்தினம், கோபியிடம் பணத்தை வெங்கடேசன் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோபி, வெங்கடேசனை இரும்பு கம்பியால் தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த வெங்கடேசன், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த ஆர்.கே.பேட்டை போலீசார், தலைமறைவாக உள்ள கோபியை தேடி வருகின்றனர்.
***
திருத்தணி மலைக்கோவிலில் இரண்டு டூ - வீலர்கள் திருட்டு
திருத்தணி: காஞ்சிபுரம் விக்னேஷ்வரர் நகரைச் சேர்ந்தவர் முருகன், 35. இவர் நேற்று, திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு 'ஹீரோ பேஷன் புரோ' பைக்கில் வந்தார். அங்குள்ள 'பார்க்கிங்'கில் வாகனத்தை நிறுத்தி விட்டு மூலவரை தரிசிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, பைக் மாயமானது தெரியந்தது.
அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மின்னல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன், 43. இவர் நேற்று, 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு, மூலவரை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து போது வாகனம் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து, இருவரின் புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
★★
கணவர் மாயம்:மனைவி புகார்
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ராமாபுரம் பஜனை கோவிலைச் சேர்ந்தவர் சுதர்சன், 27. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 6ம் தேதி ஊத்துக்கோட்டை செல்வதாக கூறிச் சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை.
அவரது மொபைல்போனை தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது மனைவி அக்சயா அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
★★
