/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தோணிரவு சாலை சரிவு சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
தோணிரவு சாலை சரிவு சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஆக 11, 2025 11:06 PM

பழவேற்காடு, பழவேற்காடு - தோணிரவு சாலையின் ஓரம் சரிவுப்பகுதி சேதம் அடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
பழவேற்காடு பிரதான சாலையில் இருந்து, ஜமீலாபாத், தோணிரவு, நக்கரத்துறவு ஆகிய மீனவ கிராமங்களுக்கு செல்லும் சாலை, கழிமுகப்பகுதியின் இடையே பயணிக்கிறது.
கழிமுகப்பகுதியின் தரைமட்டத்தில் இருந்து, ஐந்து அடி உயரத்தில் இந்த சாலை அமைந்து உள்ளது. சாலை சரிவுகளை தவிர்க்க, இருபுறமும் பாறை கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
கடந்த, 2016ல் ஏற்பட்ட புயலின்போது, அதிகப்படியான கடல்நீர் கழிமுகப்பகுதி வழியாக வெளியேறி, மேற்கண்ட சாலையின் சரிவுப்பகுதிகளை சேதப்படுத்தியது. சரிவுகளில் இருந்த பாறைகற்களும் அடித்து செல்லப்பட்டன.
அதன்பின், சரிவுப்பகுதிகள் சீரமைக்கப்படாமல் இருக்கிறது. குறுகலாக உள்ள இந்த சாலையின் சரிவுப்பகுதிகள் சேதம் அடைந்து இருப்பதால், எதிர் எதிரே வாகனங்கள் கடக்கும்போது, தடுமாற்றம் அடைகின்றன.
பள்ளி வேன்கள், தனியார் வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்டவை விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
மழைக்காலங்களில் சாலையின் இருபுறமும் உள்ள கழிமுகப்பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கும். அச்சமயங்களில் வாகனங்கள், தடுமாறும்போது அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் இந்த சாலையின் சரிவுப்பகுதிகளில் பாறைகற்கள் பதிக்கவும், எச்சரிக்கை தடுப்புகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.