/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சேதம்... சீரமைப்பு... 'ரிப்பீட்டு' 6 முறை தரைப்பாலம் துண்டிப்பு உயர்மட்ட பாலம் அமைக்காமல் வஞ்சிப்பு
/
சேதம்... சீரமைப்பு... 'ரிப்பீட்டு' 6 முறை தரைப்பாலம் துண்டிப்பு உயர்மட்ட பாலம் அமைக்காமல் வஞ்சிப்பு
சேதம்... சீரமைப்பு... 'ரிப்பீட்டு' 6 முறை தரைப்பாலம் துண்டிப்பு உயர்மட்ட பாலம் அமைக்காமல் வஞ்சிப்பு
சேதம்... சீரமைப்பு... 'ரிப்பீட்டு' 6 முறை தரைப்பாலம் துண்டிப்பு உயர்மட்ட பாலம் அமைக்காமல் வஞ்சிப்பு
ADDED : மே 26, 2025 01:58 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் குப்பம்கண்டிகை ஊராட்சியில், கொசஸ்தலையாற்றின் குறுக்கே 20 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.
இப்பாலம், 2015ம் ஆண்டு முதல்முறையாக ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைந்தது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைத்தனர்.
அதன்பின், 2019, 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டு என, தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் அடித்து செல்லப்படுவதும், ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்காலிகமாக சீரமைப்பதும் வழக்கமாக இருந்து வந்தது.
கடந்தாண்டு டிசம்பரில் கொசஸ்தலையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், தரைப்பாலம் ஆறாவது முறையாக அடித்து செல்லப்பட்டது. இதனால், குப்பம்கண்டிகை --- பனப்பாக்கம் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால், குப்பம்கண்டிகை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20 கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளான கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு, திருவள்ளூர் செல்ல 10 கி.மீ., சுற்றிக்கொண்டு, திருவாலங்காடு வழியாக திருவள்ளூர் சென்று வந்தனர்.
அதேபோல, பனப்பாக்கம் மக்கள் திருத்தணி, அரக்கோணம் செல்ல, 12 கி.மீ., சுற்றிக்கொண்டு, கடம்பத்துார் வழியாக பேரம்பாக்கம் வழியாக சென்று வந்தனர்.
இதுகுறித்து குப்பம்கண்டிகை மக்கள் கூறியதாவது:
தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். நடப்பாண்டு பெய்யும் மழையின் போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன், உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும், அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லல்படுகிறோம்.
பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர். மற்ற பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், எங்கள் கிராமத்தில் 20 ஆண்டுகளாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசும், அதிகாரிகளும் எங்களை வஞ்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒன்றிய பொது நிதியில் இருந்து, 6.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குப்பம் கண்டிகை கொசஸ்தலையாற்று தரைப்பாலம் மீது உருளைகள் அமைத்து, மண் கொட்டி தற்காலிக போக்குவரத்துக்கு சீரமைத்து உள்ளோம். உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளோம்.
- ஊரக வளர்ச்சி துறை அதிகாரி,
திருவாலங்காடு.