/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண் லாரிகளால் சேதமான தடப்பெரும்பாக்கம் சாலை
/
மண் லாரிகளால் சேதமான தடப்பெரும்பாக்கம் சாலை
ADDED : பிப் 19, 2025 02:11 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, தடப்பெரும்பாக்கம் ஏரியில், கடந்த ஆண்டு, குவாரி விடப்பட்டு மண் அள்ளப்பட்டது. ஏரியில் இருந்து, நுாற்றுக்கணக்கான டிப்பர் லாரிகளில், மண் அள்ளப்பட்டு, தடப்பெரும்பாக்கம் - ஆமூர் சாலை வழியாக வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அதிக சுமையுடன் லாரிகள் சென்றதால், மேற்கண்ட சாலை ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சேதமானது. போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலை ஏற்பட்டதால், குவாரியை தடை செய்யக்கோரியும், சாலையை சீரமைக்க வேண்டும் எனவும், வலியறுத்தி கிராமவாசிகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர்.
அச்சமயத்தில் பேச்சுக்கு வந்த அதிகாரிகள், குவாரி முடிந்ததும் சாலை சீரமைத்து தருவதாக உறுதி அளித்திருந்தனர். குவாரி முடிந்து, ஆறு மாதங்கள் ஆன நிலையில் இதுவரை சாலை புதுப்பிக்கப்படாமல் சரளை கற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாகவும் இருக்கிறது.
ஆமூர், வடக்குப்பட்டு, மாலிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பொன்னேரி வந்து செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வரும் நிலையில், அவர்கள் தடுமாற்றத்துடனும், சிரமத்துடனும் பயணிக்கின்றனர்.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சரளை கற்களில் சிக்கி, சிறு சிறு விபத்துகளுக்கு உள்ளாகின்றனர். மேற்கண்ட சாலையை சீரமைக்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

