/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காட்டுப்பாக்கம் எரிவாயு தகன மேடை சேதம் உடல் எரியூட்ட 7 கி.மீ., பயணிக்கும் அவலம்
/
காட்டுப்பாக்கம் எரிவாயு தகன மேடை சேதம் உடல் எரியூட்ட 7 கி.மீ., பயணிக்கும் அவலம்
காட்டுப்பாக்கம் எரிவாயு தகன மேடை சேதம் உடல் எரியூட்ட 7 கி.மீ., பயணிக்கும் அவலம்
காட்டுப்பாக்கம் எரிவாயு தகன மேடை சேதம் உடல் எரியூட்ட 7 கி.மீ., பயணிக்கும் அவலம்
ADDED : செப் 01, 2025 01:14 AM

பூந்தமல்லி:காட்டுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள எரிவாயு தகன மேடை சேதமானதால், உடல்களை அடக்கம் செய்ய, போக்குவரத்து நெரிசலில் 7 கி.மீ., போரூருக்கு செல்ல வேண்டியுள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் ஊராட்சியில், 60,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சென்னையையொட்டி அமைந்துள்ளதால், இங்கு அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த ஊராட்சியில் இறப்பு ஏற்பட்டால், உடல்களை எரிவாயு தகன மேடை மூலம் அடக்கம் செய்ய வேண்டும் எனில், 7 கி.மீ., தொலைவில் உள்ள போரூர் மின் மயானத்திற்கு செல்ல வேண்டியிருந்தது.
இதனால், 2014ம் ஆண்டு, காட்டுப்பாக்கம் ஊராட்சியில், 100 அடி உயர புகை போக்கியுடன் கூடிய நவீன எரிவாயு தகன மேடை, 70 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது.
இதன் மூலம், தமிழகத்தில் முதல் முறையாக நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்ட ஊராட்சி என்ற சிறப்பை காட்டுப்பாக்கம் பெற்றது. காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், மாங்காடு பகுதிகளைச் சேர்ந்தோரும், இந்த எரிவாயு தகன மேடையை பயன்படுத்தி வந்தனர்.
தகனமேடை பழுதடைந்து, புகைப்போக்கி சேதமானதால், இரண்டு ஆண்டுகளாக, இந்த தகனமேடையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், போக்குவரத்து நெரிசலில், போரூரில் உள்ள மின் மயானத்திற்கு செல்ல வேண்டியுள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த எரிவாயு தகன மேடையை விரைந்து மறுசீரமைப்பு செய்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.