ADDED : ஜன 19, 2025 02:38 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, நத்தமேடு கிராமத்தில் ரேஷன் கடை சேதமடைந்து விட்டதால், அதை அகற்றி புதிய கடை கட்டித்தர பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் வட்டம், பாக்கம் அடுத்துள்ள நத்தமேடு கிராமத்தில், ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், 1,100 ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த கடை கட்டி 20 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது சேதமடைந்து உள்ளது. இந்த கடையின் முன்புறம் உள்ள பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியில் தெரிகின்றன.
பக்க சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டு, பாழடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், மாதம் தோறும் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனேயே பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
எனவே, சேமதடைந்த இந்த ரேஷன் கடையை அகற்றி விட்டு, புதிய கடை கட்டித் தர, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

