/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி தேசிய நெடுஞ்சாலை சேதம்
/
திருத்தணி தேசிய நெடுஞ்சாலை சேதம்
ADDED : செப் 22, 2024 01:38 AM

திருவாலங்காடு:சென்னை பாடியில் இருந்து அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், கனகம்மாசத்திரம், திருத்தணி வழியாக ஆந்திர மாநிலம் திருப்பதி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சாலை வழியாக, 24 மணி நேரம் இரு சக்கர வாகனம், கார், வேன், லாரி, பஸ் மற்றும் கனரக வாகனங்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இச்சாலையில் திருத்தணியில் இருந்து கனகம்மாசத்திரம் வரை ஆங்காங்கே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சாலை பராமரிப்புக்காக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாகியும் இந்த பள்ளங்கள் சரிசெய்யாமல் கிடக்கின்றன. இதனால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர்.
சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் தீவிரம் காட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலைகளை பராமரிப்பதிலும், சீரமைப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை என, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.