/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சர்க்கரை ஆலையில் அரவை தாமதம் கரும்பு வெட்டுக்கூலி உயரும் அபாயம்
/
சர்க்கரை ஆலையில் அரவை தாமதம் கரும்பு வெட்டுக்கூலி உயரும் அபாயம்
சர்க்கரை ஆலையில் அரவை தாமதம் கரும்பு வெட்டுக்கூலி உயரும் அபாயம்
சர்க்கரை ஆலையில் அரவை தாமதம் கரும்பு வெட்டுக்கூலி உயரும் அபாயம்
ADDED : அக் 04, 2024 08:53 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. 40 ஆண்டுகள் பழமையான இந்த ஆலைக்கு அரக்கோணம், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.
நடப்பு 2024 --- 25ம் ஆண்டுக்கான கரும்பு அரவை இலக்காக, 2 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் நவம்பர் இறுதியில் ஆலையை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் முதல் வாரத்தில் இயக்கினால் மட்டுமே வெட்டுக்கூலி உயர்வை கட்டுப்படுத்த முடியும் மற்றும் வேலைக்கு ஆட்கள் வருவர் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருவாலங்காடை சேர்ந்த கரும்பு விவசாயிகள் கூறியதாவது:
சர்க்கரை ஆலை நிர்வாகம் நவம்பர் முதல் வாரத்தில் அரவையை துவக்கும் என்ற நம்பிக்கையில், அக்டோபர் கடைசி மற்றும் நவம்பர் மாதத்தில் அறுவடை தயாராகும்படி, 1,000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் கரும்பை விதைக்கப்பட்டுள்ளது.
ஆலையின் இயந்திரம் பழுதுபார்க்கும் பணி நடைப்பெறுகிறது எனக் காரணம் கூறி, நவம்பர் இறுதியில் துவங்கும் என, தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதனால், ஆந்திராவில் உள்ள தனியார் கரும்பு ஆலைக்கு விவசாயிகள் பலரும் தங்கள் கரும்பை அனுப்பி வருகின்றனர். இதை தடுக்க நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆந்திரா பகுதியில் சர்க்கரை ஆலை திறக்கப்பட்டதால், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் அங்கு படையெடுத்து உள்ளனர். இதனால், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், கரும்பு வெட்டுவதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதுடன், வெட்டுக்கூலி அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இதே நிலை ஒவ்வொரு ஆண்டும் ஏற்படுகிறது.
கடந்தாண்டு 700 இருந்து 1,600 ரூபாயாக வெட்டுக்கூலி உயர்ந்தது. சர்க்கரை ஆலை திறப்பில் தாமதம் ஏற்படுமானால், இந்தாண்டு வெட்டுக்கூலிக்கு 2,000 வரை கொடுக்க வேண்டியிருக்கும்.
எனவே, நவம்பர் முதல் வாரத்தில் திறக்க வேண்டும். வெட்டுக்கூலியை முறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.