/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராம நத்தம் வீடுகளுக்கு பட்டா வழங்காமல்...இழுத்தடிப்பு : திருத்தணி நகராட்சியில் 4,000 பேர் பரிதவிப்பு
/
கிராம நத்தம் வீடுகளுக்கு பட்டா வழங்காமல்...இழுத்தடிப்பு : திருத்தணி நகராட்சியில் 4,000 பேர் பரிதவிப்பு
கிராம நத்தம் வீடுகளுக்கு பட்டா வழங்காமல்...இழுத்தடிப்பு : திருத்தணி நகராட்சியில் 4,000 பேர் பரிதவிப்பு
கிராம நத்தம் வீடுகளுக்கு பட்டா வழங்காமல்...இழுத்தடிப்பு : திருத்தணி நகராட்சியில் 4,000 பேர் பரிதவிப்பு
ADDED : ஜூலை 17, 2025 02:09 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், கிராம நத்தத்தில் வீடுகள் கட்டி வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என அரசு அறிவித்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன் வீடுகளை சர்வே செய்தும் திருத்தணி நகராட்சி பகுதியில் 4,000 பேருக்கு இதுவரை பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனால், வீடுகள் மற்றும் சொத்துக்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் நிலத்தின் உரிமையாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
திருத்தணி நகராட்சி, 12.42 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு மொத்தம், 21 வார்டுகளில், 12,029 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், 1,510 வணிக வளாகங்கள் உள்ளன.
இதில், 2,300க்கும் மேற்பட்டோர் அரசு புறம்போக்கு, பாறை புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு மற்றும் வனப்பகுதியில் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
பரிந்துரை
மேலும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கிராம நத்தத்தில் வீடுகள் கட்டி, நுாறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கு, நகராட்சி நிர்வாகம் முறையாக சொத்து வரி வசூலித்து வருகிறது.
நகராட்சியில் உள்ள வீடுகள், காலிமனைகளுக்கு கடந்த, 2017ம் ஆண்டு வரை திருத்தணி தாசில்தார் அலுவலகம் மூலம் பட்டா வழங்கப்பட்டு வந்தது.
தாசில்தார் அலுவலகம் மூலம் நகராட்சியில் பட்டா வழங்குதல், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்வதால் விண்ணப்பிக்கும் பயனாளிகள் பல மாதங்களாக சுற்றித்திரிந்து வாங்க வேண்டியிருந்தது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு, திருத்தணி நகராட்சியில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா, பெயர் மாற்றம், திருத்தங்கள் செய்வதற்கு தனியாக ஒரு தாசில்தார் தலைமையில் மூன்று சர்வேயர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்த, 2017ம் ஆண்டு நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், காலிமனை போன்றவை கணக்கெடுக்கும் பணி துவங்கியது. பின், 2018ம் ஆண்டு நில அளவையாளர்கள் மற்றும் ஊழியர்கள் நியமித்து, நகராட்சியில் உள்ள அனைத்து வீடுகள், வணிக வளாகங்களுக்கு நேரில் சென்று அளவீடு செய்யப்பட்டது.
இதில், 2,200 பேர் பாறை, நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்ததும், 4,000 குடும்பத்தினருக்கு மேல் கிராம நத்தத்தில் வீடுகள் கட்டி பல நுாறு ஆண்டுகளாக வசித்து வந்ததும் தெரிய வந்தது. பின் 2020ம் ஆண்டு பட்டா வழங்குவதற்கு 'ஆன்லைன்' மூலம் பதிவேற்றம் செய்யும் பணி துவங்கியது.
ஆன்லைன்
இதையடுத்து தமிழக அரசு கிராம நத்தம், ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலத்தில், குறைந்த பட்சம் வீடுகள் கட்டி பத்து ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களின் பெயர்களில் 'ஆன்லைன் 'பட்டா வழங்கப்படும் என அறிவித்தது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஆட்சேபனை இல்லாத புறம்போக்கில் வசிக்கும் குடும்பங்களுக்கு 'ஆன்லைன்' பட்டா வழங்கும் பணி துவங்கி தொடர்ந்து பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், கிராம நத்தத்தில் வீடுகள் கட்டியவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால், வீடுகளுக்கு பட்டா பெற முடியாததால், வீட்டு நிலத்தை பெயர் மாற்றம் மற்றும் பரிமாற்றம் செய்ய முடியவில்லை.
எனவே, கிராம நத்தத்தில் வசிப்பவர்களுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இது குறித்து திருத்தணி நகர நிலஅளவை பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகராட்சியில், 4,000 வீடுகள் கிராம நத்தத்தில் உள்ளது என, அளவீடு செய்தும், அவர்களின் பெயர்கள் விவரம் சேகரித்து பட்டா வழங்குவதற்கு 'ஆன்லைன் 'மூலம் பதிவேற்றம் செய்து தயார் நிலையில் வைத்து உள்ளோம்.
மேலும் பட்டா வழங்கப்படும் பயனாளிகளின் பெயர்கள், வீடுகள் கட்டியுள்ள சதுரடி கணக்கும் புள்ளி விவரம் தயாரித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நில அளவை, நிலவரி மற்றும் பதிவேடுகள் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிஉள்ளோம்.
இயக்குநர் பட்டா வழங்கலாம் என அறிவித்தால், உடனே நில அளவையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் மூன்று மாதத்திற்குள் அனைவருக்கும் பட்டா வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.