/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் இழுபறி * புதிய இடம் தேடி அலையும் சுகாதாரத்துறையினர்
/
பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் இழுபறி * புதிய இடம் தேடி அலையும் சுகாதாரத்துறையினர்
பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் இழுபறி * புதிய இடம் தேடி அலையும் சுகாதாரத்துறையினர்
பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதில் இழுபறி * புதிய இடம் தேடி அலையும் சுகாதாரத்துறையினர்
ADDED : ஜன 05, 2025 10:36 PM

பேரம்பாக்கம்:பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை நீர்நிலை புறம்போக்கில் இருப்பதால், 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் புதிய மருத்துமவனை கட்ட முடியாமல் சுகாதாரத் துறையினர் தவித்து வருகின்றனர். மேலும், புதிய மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கு இடம் தேடி சுகாதாரத் துறையினர் அலைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 1974ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
பேரம்பாகத்திலிருந்து 20 கி.மீ., துாரத்திற்கு அரசு மருத்துவமனை இல்லாததால் பேரம்பக்கத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில், 30 படுக்கைகள் உள்ள நிலையில் ஐந்து மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
24 மணி நேரமும் இயங்கும்
பேரம்பாக்கத்தைச் சுற்றியுள்ள, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, தினமும், 500 - 1,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளாக, 50 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 24 மணி நேரமும் இயங்கும் இம்மருத்துவமனையில், பொது மருத்துவம், சித்த மருத்துவம், கண், பல், குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு, ஸ்கேன் மையம், எக்ஸ்--ரே மற்றும் உள் நோயாளிகள் பிரிவு என, அனைத்து பிரிவுகளும் குறுகிய இடத்தில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 2023ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை தலைமையில் ஈரோடு மொடக்குறிச்சி பா.ஜ.க., சரஸ்வதி, திருப்போரூர், வி.சி.க., பாலாஜி, பரமத்திவேலுார் அ.தி.மு.க., சேகர்,திருச்செங்கோடு கொங்கு நாட்டு மக்கள் தேசம் கட்சி, ஈஸ்வரன் ஆகிய ஐந்து பேர் பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையை ஆய்வு செய்தனர்.
முதலில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால் அவர்களிடம் மருத்துவமனை நிலவரம் குறித்த கேட்டனர்.
அப்போது, சட்டமன்ற குழுவினரிடம் பகுதிவாசிகள் இரவு மருத்துவர் இல்லாதது, போதிய உபகரணங்கள் இல்லாததால் கர்ப்பணி ஒருவர் இறந்ததாக என, பல்வேறு குற்றச்சாட்டுக்களை வைத்தனர்.
இதை கேட்ட சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை முறையாக பணிக்கு வராத மருத்துவர் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்து புதிய மருத்துவமனை கட்டுவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது, பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை கட்டடங்களை இடித்து விட்டு புதிய மருத்துவமனை கட்ட, தமிழக அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், சுகாதாரத் துறையினர் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு இடம் தேடி அலைந்து வருகின்றனர்.
இது பேரம்பாக்கம் மருத்துவமனைக்கு வரும் பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நீர்நிலை புறம்போக்கில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் வளாகத்தில், சில மாதங்களுக்கு புதிய சித்தா மருத்துவ கட்டப்பட்டது எப்படி என்ற கேள்வி பகுதிவாசிகளிடையே எழுந்துள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன்கருதி புதிய மருத்துவமனை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சில தினங்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாயத் துறையினர் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி உட்பட இரு இடங்களை ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பேரம்பாக்கத்தில் மருத்துவமனை கட்ட தேவையான இடம் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம்' என்றார்.