/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதுவாயல் - பழவேற்காடு சாலை பணி வீடுகள், கடைகள் இடித்து அகற்றம்
/
புதுவாயல் - பழவேற்காடு சாலை பணி வீடுகள், கடைகள் இடித்து அகற்றம்
புதுவாயல் - பழவேற்காடு சாலை பணி வீடுகள், கடைகள் இடித்து அகற்றம்
புதுவாயல் - பழவேற்காடு சாலை பணி வீடுகள், கடைகள் இடித்து அகற்றம்
ADDED : மார் 20, 2025 02:38 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த புதுவாயல் கிராமத்தில் இருந்து சின்னகாவணம் வரை, 4.2 கி.மீ., தொலைவிற்கான மாநில நெடுஞ்சாலையை, தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாயில், நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது.
இது, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுவாயல் கிராமத்தில் துவங்கி, ஏலியம்பேடு, குண்ணம்மஞ்சேரி, பெரியகாவணம், சின்னகாவணம் வழியாக, பொன்னேரி - பழவேற்காடு சாலையில் முடிகிறது.
இதற்காக, அரசு மற்றும் தனியார் நிலங்கள் என, 31,400 சதுரமீட்டர் நிலம் கையப்படுத்தப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்ட பின், அந்த நிலங்களில் உள்ள 54 வீடு மற்றும் கடைகள் இடித்து அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது:
கட்டடங்கள் இடித்த பின், சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நடக்கிறது. இத்திட்டத்தில், ஏற்கனவே புதுவாயல் - குண்ணம்மஞ்சேரி வரையிலான சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன.
பெரியகாவணம் - சின்னகாவணம் இடையேயான, 350 மீ., தொலைவிற்கான பணிகளே எஞ்சியுள்ளன. தற்போது, அங்கு பணிகளை மேற்கொள்வதற்காகவே கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள வீடு, கடைகள் அகற்றப்படுகின்றன. ஓரிரு மாதங்களில் சாலை விரிவாக்க பணிகள் நிறைவுபெறும்.
இந்த சாலையில், பெரியகாவணம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டிற்கு மாற்றாக, 59.26 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்தவுடன், புதுவாயல் - பழவேற்காடு சாலை திட்டம் பயன்பாட்டிற்கு முழுமையாக வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.