/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.103 கோடியில் வளர்ச்சி பணிகள் 18 மாதங்களில் முடிக்கு இலக்கு நிர்ணயம்
/
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.103 கோடியில் வளர்ச்சி பணிகள் 18 மாதங்களில் முடிக்கு இலக்கு நிர்ணயம்
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.103 கோடியில் வளர்ச்சி பணிகள் 18 மாதங்களில் முடிக்கு இலக்கு நிர்ணயம்
திருத்தணி முருகன் கோவிலில் ரூ.103 கோடியில் வளர்ச்சி பணிகள் 18 மாதங்களில் முடிக்கு இலக்கு நிர்ணயம்
ADDED : டிச 30, 2024 01:39 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக, 'மாஸ்டர் பிளான்' திட்டத்தில், வாகனங்கள் நிறுத்துமிடம், மூன்று அடுக்கு அன்னதான கூடம், பக்தர்கள் இலவச தங்குமிடம், ராஜகோபுரம் இணைப்பு படிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு, 103.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது அடுத்த மாதத்திற்குள் பணிகளுக்கு, டெண்டர் விடப்பட்டு, 18 மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடித்து பயன்பாட்டிற்கு விட கோவில் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
மேலும் ஆண்டுதோறும் நடைபெறும், ஆடிக் கிருத்திகை, படித் திருவிழா, பிரம்மோற்சவம் மற்றும் கந்தசஷ்டி போன்ற முக்கிய விழாக்களின் போது, பல லட்சம் பேர் வந்து முருகப் பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு, காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதான கூடத்தில்,150 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிட இடவசதி உள்ளதால், பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சில ஆண்டுகளாக அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார விடுமுறையான ஞாயிறு ஆகிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் வாயிலாக மலைக்கோவிலுக்கு வருவதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், மலைக்கோவிலில் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதியின்றி பக்தர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுமட்டுமின்றி பக்தர்கள் குளியல் அறை மற்றும் கழிப்பறைகள் போதிய அளவில் இல்லாததால் கடும் அவதிப்பட்டனர்.
கோவில் கிழக்கு புறத்தில் கட்டப்பட்டுள்ள 9 நிலை ராஜகோபுரத்திற்கும், தேர்வீதிக்கும் இடையே இணைப்பு படிகள் ஏற்படுத்தாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், ராஜகோபுரத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடத்துவதில் காலதாமதம் ஆகிறது.
இந்த நிலையில், ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கு, 'மாஸ்டர் பிளான்' திட்டம் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், முதற்கட்டமாக, 103.50 கோடி ரூபாயில் முக்கிய ஆறு வளர்ச்சி பணிகள் செய்வதற்கு அரசாணை, கடந்த 18ம் தேதி வெளியிட்டுள்ளது.
வரும், ஜனவரி மாதம் 18ம் தேதிக்குள் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, 18 மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடித்து, பக்தர்கள் பயன்பாட்டிற்குவிட கோவில் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.