/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புரட்டாசி மஹாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
/
புரட்டாசி மஹாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மஹாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மஹாளய அமாவாசை தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்
ADDED : அக் 03, 2024 02:30 AM

பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் நேற்று, மாகாளய அமாவாசை பூஜை மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாட்களில், நம் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்வது, வீட்டில் வழிபாடு மேற்கொள்வது ஹிந்துக்களின் வழக்கம்.
இதில், புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நாளில் குளம், கடற்கரை பகுதிகளில் அக்னி தீர்த்த புனித நீராடி முன்னனோர்கள் ஆத்மா சாந்தியடையும் வகையில் தர்ப்பணம் செய்து வழிபடுகின்னறர்.
மஹாளய அமாவாசை நாளான நேற்று, பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலின் முகப்பில் உள்ள 'ஆனந்தபுஷ்கரணி' திருக்குளத்தில், அதிகாலை முதலே நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
திருத்தணி
திருத்தணி நகரில், முருகன் கோவில் மலையடிவாரத்தில் உள்ள திருக்குளம், பழைய தர்மராஜா கோவில் அருகே உள்ள சிவன் குளம் மற்றும் மேல்திருத்தணி நல்லாங்குளம் ஆகிய இடங்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மேலும், அமாவாசை ஒட்டி திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், மூலவருக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருவாலங்காடு
திருவாலங்காடில் வடாரண்யேஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தர்ப்பணம் கொடுக்க ஏராளமாக பக்தர்கள் குவிந்தனர். இதில், திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மட்டுமல்லாமல், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், 2-3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தர்பணம் கொடுத்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று, திரளான பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, பெருமாளை வழிபட்டு செல்கின்றனர்.
நேற்று, புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே திருவள்ளூருக்கு வந்து குவிந்தனர்.
கோவில் வளாகத்தில் தங்கிய பக்தர்கள், நேற்று காலை ஹிருதாப நாசினி குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின், வீரராகவ பெருமாளை தரிசித்தனர்.
அதேபோல், திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், மேல்நல்லாத்துார் பகுதியில் உள்ள முக்குளத்தீஸ்வரர் கோவில் குளத்திலும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
- நமது நிருபர்கள் குழு -