/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : ஜன 16, 2024 11:40 PM

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று மாட்டு பொங்கல் விழாவை ஒட்டி மூலவருக்கு, அதிகாலை 4:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்வேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை 6:00 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டது.
பொங்கல் விழாவை ஒட்டி மூன்று நாட்களாக தொடர் விடுமுறை மற்றும் நேற்று செவ்வாய்க்கிழமை முருகருக்கு உகந்த நாள் என்பதால், வழக்கத்திற்கு மாறாக காலை முதலே ஆயிரக்கணக்கான வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்தனர்.
இதனால் தேர்வீதியில் பக்தர்கள் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க, ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், மூன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இதுதவிர, நேற்று வெளியூர்களில் இருந்து பக்தர்கள் கார், வேன், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் மலைக்கோவிலுக்கு வந்ததால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் கோவில் நிர்வாகம், நான்கு மணி நேரத்திற்கு மேல் இருசக்கர வாகனங்கள் தவிர, மீதமுள்ள அனைத்து வாகனங்களும் மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதி வழங்கவில்லை.
மலைப்பாதை நுழைவு வாயிலில் இருந்து இரண்டு கோவில் பேருந்துகள் மூலம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பெரும்பாலான பக்தர்கள் மலைப்பாதை வழியாக நடந்து சென்றனர்.
முருகன் திருவீதியுலா
பொங்கல் விழாவை ஒட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வருவார். அதன்படி, நேற்று முன்தினம் பொங்கல் நாளில், மலைக்கோவில் பின்புறத்தில் உள்ள அர்ச்சகர்கள் வசிக்கும் பகுதியில் உற்சவர் திருவீதியுலா வந்தார்.
நேற்று மாட்டு பொங்கலை ஒட்டி உற்சவர் முருகன் மேல்திருத்தணியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காணும் பொங்கலை ஒட்டி திருத்தணி நகரம் முழுதும் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

