/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள்... அவதி!;தனியார் விடுதியில் இரட்டிப்பு கட்டணம் வசூல்:மீண்டும் ஆன்-லைன் முன்பதிவு துவக்கப்படுமா?
/
திருத்தணியில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள்... அவதி!;தனியார் விடுதியில் இரட்டிப்பு கட்டணம் வசூல்:மீண்டும் ஆன்-லைன் முன்பதிவு துவக்கப்படுமா?
திருத்தணியில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள்... அவதி!;தனியார் விடுதியில் இரட்டிப்பு கட்டணம் வசூல்:மீண்டும் ஆன்-லைன் முன்பதிவு துவக்கப்படுமா?
திருத்தணியில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள்... அவதி!;தனியார் விடுதியில் இரட்டிப்பு கட்டணம் வசூல்:மீண்டும் ஆன்-லைன் முன்பதிவு துவக்கப்படுமா?
ADDED : பிப் 22, 2024 01:10 AM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான தேவஸ்தான குடில்களில் தங்குவதற்கு அறைகள் எடுப்பதற்கு முன்பதிவு செய்வதற்கு ஆன்-லைன் சேவை, நிறுத்தப் பட்டதால், பக்தர்கள் அறைகள் கிடைக்காமல் சிரமப் படுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி தனியார் விடுதிகளில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்ந்துள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவர் முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.
சில பக்தர்கள் இரவு தங்கியும் செல்கின்றனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு வசதியாக குறைந்த வாடகையில் குடில்கள் மற்றும் அறைகள் ஏற்படுத்திஉள்ளன.
அந்த வகையில் திருத்தணி பேருந்து நிலையம் அருகே தணிகை இல்லத்தில், 39 குளிர்சாதன குடில்கள், 48 அறைகள் உள்ளன.
மலைப்பாதை எதிரில் கார்த்திகேயன் இல்லத்தில், 52 குடில்கள், 48 அறைகள், மலையடி வாரத்தில் திருக்குளத்தில் சரவணபொய்கை இல்லத்தில், 39 அறைகள் உள்ளன. இந்த அறைகள் பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் விடப்பட்டு வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் வரை குடில்கள் மற்றும் அறைகள் பக்தர்கள் எளிதாக எடுத்துக் கொள்வதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதனால் பக்தர்கள் தாங்கள் இருக்கும் ஊரில் இருந்தே, முன்கூட்டியே அறைகள் முன்பதிவு செய்துவிட்டு கோவிலுக்கு வந்து முருகப் பெருமானை வழிபடுவர்.
இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக 2019ம் ஆண்டு முதல் தேவஸ்தான அறைகள் எடுப்பதற்கு ஆன்-லைன் முன்பதிவு கோவில் நிர்வாகம் நிறுத்தியது.
இதனால் திருத்தணி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் கிடைக்காமல், தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே, பக்தர்கள் நலன்கருதி கோவில் நிர்வாகம் மீண்டும் அறைகள் முன்பதிவு செய்வதற்கு ஆன்-லைன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தணிகை இல்லம், கார்த்திகேயன் இல்லம் மற்றும் சரவணபொய்கை இல்லத்தில் உள்ள அறைகள் மற்றும் குடில்கள் பழுதாகி உள்ளன.
தற்போது தணிகை இல்லத்தில் குடில்கள் சீரமைத்து பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. தற்போது அறைகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
'அதே போல் கார்த்திகேயன் இல்லம் மற்றும் சரவணபொய்கையில், குடில்கள் மற்றும் அறைகள் சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
'விரைவில் குடில் மற்றும் அறைகள் சீரமைத்த பின் மீண்டும் ஆன்-- லைன் முன்பதிவு துவங்கப்படும்' என்றார்.