/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார்த்திகை மாத பிறப்பு விரதம் துவங்கிய பக்தர்கள்
/
கார்த்திகை மாத பிறப்பு விரதம் துவங்கிய பக்தர்கள்
ADDED : நவ 17, 2024 01:41 AM

திருவள்ளூர்,
கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, அய்யப்பபக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை துவங்கினர்.
ஆண்டுதோறும் தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாளன்று அய்யப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்ல மாலை அணிந்து, ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு, இருமுடி கட்டி கோவிலுக்குச் செல்வது வழக்கம். நேற்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில், உள்ள அய்யப்பன் கோவிலில், பக்தர்கள் மாலை அணிவதற்காக, அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர்.
அவர்களுக்கு அய்யப்பன் சன்னிதியில் குரு சுவாமி ரவி மாலை அணிவித்தார்.
இதனால் நேற்று முதல் பூஜை பொருட்கள்விற்பனை செய்யும் கடைகளிலும் சந்தனம்,ருத்ராட்சம் மற்றும் துளசி மாலை, காவி, நீலம், கருப்பு நிறத்திலான வேட்டி, துண்டு விற்பனை செய்யும் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று கார்த்திகை முதல் தேதியை ஒட்டி, பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. குருசாமி சுப்பையா பக்தர்களுக்கு சந்தனம், துளசி ஆகியவற்றில் செய்த மாலைகளை அணிவித்தார்.