/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா விற்பனை, வழிப்பறி திருடர்களை பிடிப்பதில்...திணறல்!
/
கஞ்சா விற்பனை, வழிப்பறி திருடர்களை பிடிப்பதில்...திணறல்!
கஞ்சா விற்பனை, வழிப்பறி திருடர்களை பிடிப்பதில்...திணறல்!
கஞ்சா விற்பனை, வழிப்பறி திருடர்களை பிடிப்பதில்...திணறல்!
ADDED : நவ 21, 2024 02:42 AM
திருவள்ளூர்- திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குறைவான போலீசாரே பணிபுரிந்து வருகின்றனர். இதனால், குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை என, நான்கு காவல் உட்கோட்டத்தில், 22 காவல் நிலையம், தலா நான்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு காவல் நிலையம் என, மொத்தம் 30 காவல் நிலையங்கள் உள்ளன.
இதில், ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், ஏட்டுக்கள், முதல்நிலை காவலர்கள், போலீசார் என, 35 பேர் பணிபுரிய வேண்டும்.
ஆனால், தற்போது காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், ஏட்டுக்கள், முதல்நிலை காவலர்கள், போலீசார் என, 20 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில், அலுவலக பணி மற்றும் பிற பணிகளுக்கு காவலர்கள் செல்வதால், காவல் நிலையங்களில் போலீசாரே இருப்பதில்லை.
1,050 பேர்
அதேபோல், மாவட்டத்தில் 30 காவல் நிலையங்களில், 1,050 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், ஏற்கனவே 60 சதவீதம் என, 630 போலீசார் பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது மாவட்டத்தில், 280 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால், இரவு ரோந்து பணி பெயரளவிற்கு மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கஞ்சா, போதை பாக்குகள், செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மேலும், அரசியல் கட்சி, அரசு நிகழ்ச்சிகளுக்கு போலீசார் பாதுகாப்புக்கு செல்வதால், மாவட்டம் முழுதும் பிற பணிகளுக்கு போலீசார் இருப்பதில்லை. இதன் காரணமாகவும், குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
உதாரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் உள்ள காவல் நிலையத்தில், நான்கு உதவி ஆய்வாளர்கள், இரண்டு ஏட்டுகள், நான்கு முதல்நிலை காவலர்கள், 22 போலீசார் என, மொத்தம், 32 பேர் பணிபுரிந்து வந்தனர்.
தற்போது, ஒரு உதவி ஆய்வாளர், இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர், நான்கு ஏட்டுகள், மூன்று முதல்நிலை காவலர்கள், ஐந்து போலீசார் என, 15 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு ஏ.டி.எஸ்.பி., இரு டி.எஸ்.பி., மற்றும் ஆரம்பாக்கம், ஆர்.கே.பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் இரு ஆய்வாளர் பணியிடங்கள், ஏழு மாதங்களாக காலியாக உள்ளன.
அதேபோல், மூன்று போக்குவரத்து காவல் ஆய்வாளர், 40 உதவி ஆய்வாளர்கள், 200 போலீசார் பணியிடங்கள் என, மொத்தம் 248 பணியிடங்கள் காலியாக உள்ளன.
மருத்துவ விடுப்பு
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் மூன்று டி.எஸ்.பி.,க்கள் தொடர்ந்து மருத்துவ விடுப்பில் உள்ளனர். மேலும், காவலர்கள் பலரும் அடிக்கடி மருத்துவ விடுப்பில் சென்று விடுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் காவல் நிலையங்களில் போதிய காவலர்களை நியமித்து, குற்றச் செயல்களை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து, 2022 ஜனவரி மாதம் செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு ஆகிய காவல் நிலையங்கள், ஆவடி காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் சென்றது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்தவர்கள், தங்கள் விருப்பத்தின்படி, தற்போது இந்த காவல் நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த காவல் நிலையங்களில், தற்போது தலா 100 காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு காவல் நிலையத்தில் 20 பேர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், காவலர்களுக்கு வழங்கப்படும் பயணப்படியில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரிய காவலர்கள் விரும்புவதில்லை.
அதாவது, ஆவடி காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு ஷிப்டு முறையில் பணி வழங்கப்படுகிறது. மேலும், காவலர்களுக்கு பயணப்படியாக அனைவருக்கும், தலா 7,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், 24 மணி நேரம் காவலர்கள் பணிபுரிய வேண்டும். அவர்களுக்கான பயணப்படியும் தகுதிக்கேற்ப, 1,500லிருந்து 3,500 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், இங்கு பணிபுரிய காவலர்கள் விரும்புவதில்லை.
மேலும், காவல்துறை தலைவர் மற்றும் மாவட்ட எஸ்.பி., திருவள்ளூர் மாவட்ட காவல்துறையில் தவறு செய்யும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதும், திருவள்ளூர் மாவட்டத்தில் காவலர்கள் பணிபுரிவதில் விருப்பம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் காவலர்களிடையே எழுந்துள்ளது.