ADDED : ஜன 29, 2025 12:27 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது பகவதிபட்டாபிராமபுரம் கிராமம். இங்கு ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ஒருங்கிணைந்த ஆண்கள் கழிப்பறை வளாகம் 2012-- - 13ம் ஆண்டு, 4.50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டது.
கிராமத்தில் திறந்தவெளியில் இயற்கை உபாதைக்குச் செல்வதைத் தவிர்க்கும் பொருட்டும், சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் வகையில், ஆண்கள் கழிப்பறை வளாகம் அமைக்கப்பட்டது.
சில ஆண்டாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும் பராமரிப்பு இல்லாததால், பகுதிவாசிகள் இந்த கழிப்பறை வளாகத்தை பயன்படுத்துவதை நிறுத்தினர். தற்போது வளாகத்தைச் சுற்றிலும் செடிகள் வளர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பராமரிப்பு இல்லாததால், தற்போது, கழிப்பறை வளாகம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைக்குச் செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
எனவே, ஒருங்கிணைந்த ஆண்கள் கழிப்பறை வளாகத்தை சீரமைத்து, முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பராமரிக்காததால் கழிப்பறை கட்டடம் பயன்பாடின்றி உள்ளது. மீண்டும் சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

