/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி மீண்டும் நேரடி ரயில் சேவை
/
கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி மீண்டும் நேரடி ரயில் சேவை
கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி மீண்டும் நேரடி ரயில் சேவை
கும்மிடிப்பூண்டி - வேளச்சேரி மீண்டும் நேரடி ரயில் சேவை
ADDED : நவ 13, 2024 09:02 PM
சென்னை:ஆவடி, கும்மிடிப்பூண்டியில் இருந்து, வேளச்சேரிக்கு மீண்டும் நேரடி ரயில் சேவை விரைவில் துவங்கப்படும் என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எழும்பூர் -- கடற்கரை வரை, நான்காவது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, 274.20 கோடி ரூபாயில், புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டில் துவங்கியது. இதன் காரணமாக, கடற்கரை -- சிந்தாதிரிப்பேட்டை இடையே, மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் இருந்து, நேரடியாக மேம்பால மார்க்கத்தில், வேளச்சேரி ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதற்கிடையே, கடற்கரை -- வேளச்சேரி இடையே மேம்பால ரயில் தடத்தில், வழக்கமான மின்சார ரயில் சேவை, அக்.,29ல் துவங்கியது. இந்த ரயில் சேவை, 14 மாதங்களுக்கு பின் துவங்கியதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இருப்பினும், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி தடங்களில் இருந்து, வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள், தற்போது கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே, இந்த ரயில்களின் சேவையையும் மீண்டும் துவங்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
கடற்கரை - வேளச்சேரி தடத்தில், மேம்பால ரயில்களின் சேவையை படிப்படியாக துவங்கி வருகிறோம். இதேபோல், அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டியில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட, மின்சார ரயில்களின் சேவையை மீண்டும் துவங்க உள்ளோம். இதற்காக, கால அட்டவணை மாற்றும் பணிகள் நடக்கின்றன. எனவே, இந்த ரயில்களின் சேவையும் விரைவில் துவங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.