/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிருப்தி! l மானிய விலை அரசு சிமென்ட் வழங்குவது குறைப்பு l வீடு கட்டுவோர் கூடுதலாக செலவழிக்கும் பரிதாபம்
/
அதிருப்தி! l மானிய விலை அரசு சிமென்ட் வழங்குவது குறைப்பு l வீடு கட்டுவோர் கூடுதலாக செலவழிக்கும் பரிதாபம்
அதிருப்தி! l மானிய விலை அரசு சிமென்ட் வழங்குவது குறைப்பு l வீடு கட்டுவோர் கூடுதலாக செலவழிக்கும் பரிதாபம்
அதிருப்தி! l மானிய விலை அரசு சிமென்ட் வழங்குவது குறைப்பு l வீடு கட்டுவோர் கூடுதலாக செலவழிக்கும் பரிதாபம்
ADDED : பிப் 05, 2024 05:52 AM
தமிழக அரசு 2015ல் 'அம்மா' சிமென்ட் திட்டம் அறிமுகப்படுத்தி விற்பனைக்கு கொண்டு வந்தது. மத்திய, மாநில அரசுகள், வழங்கும் தொகுப்பு வீடுகள் கட்டுபவர்கள் மற்றும் கிராமப் புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் நலன்கருதி அரசு சலுகை விலையில் அம்மா சிமென்ட் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் மற்றும் மாநில அரசின் பழங்குடி இனத்தவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
அம்மா சிமென்ட் மூட்டைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில், முன்பதிவு செய்தும், தேவையானமூட்டைகளுக்கு பணத்தை வங்கியில் செலுத்தி வரைவு காசோலை பெற்று வாணிபக் கிடங்கில் கொடுக்க வேண்டும்.
சான்று
முன்னுரிமை அடிப்படையில் வீடுகட்டும் பயனாளிகளுக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு, 10 முதல், 100 மூட்டைகள் வரை அம்மா சிமென்ட் பெறலாம். 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை சிமென்ட், 190--- - 210 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதுவே வெளிமார்க்கெட்டில், 370---- 460 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரேஷன் கார்டு மூலம், 100 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டுவோருக்கு 50 சிமென்ட் மூட்டைகளும், 1,500 சதுர அடி வரை வீடு கட்டிக் கொள்வோருக்கு அதிகபட்சம் 750 சிமென்ட் மூட்டைகள் வரை பெறலாம்.
இந்த சிமென்ட் பெற கிராம நிர்வாக அலுவலர், ஒன்றிய மேற்பார்வையாளர் ஆகியோரிடம் வீடு கட்டுவதாக சான்று பெற வேண்டும்.
வாடகை
அரசு சலுகை சிமென்ட் வாங்குபவர்கள், நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு டிராக்டர், மாட்டுவண்டி, சரக்கு ஆட்டோ மற்றும் வேன் ஆகியவற்றை கொண்டு வந்து சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் செல்ல வேண்டும். வாகனங்களின் வாடகை பயனாளிகளே ஏற்க வேண்டும்.
சிமென்ட் வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பதால், குறைந்த விலை அம்மா சிமென்ட் மூட்டைகள் வாங்குவதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கினர். இதனால், பயனாளிகள் வரைவு காசோலைகள் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் கொடுத்து முன்பதிவு செய்து பல மாதங்கள் காத்திருப்பர்.
இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக அம்மா சிமென்ட் விற்பனையை குறைத்துக் கொண்டது. தற்போது ஒரு ரேஷன் கார்டுக்கு, 25 மூட்டைகள் சிமென்ட் மட்டுமே வழங்கப்படுகின்றன.
இதனால் தொகுப்பு வீடுகள் கட்டுபவர்கள், கிராமங்களில் வீடு கட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகள் கட்டுவதற்கும் தயக்கம் காட்டுகின்றனர்.
தனி நபர் வீடு கட்டுவதற்கு, மானிய விலை சிமென்ட் மூட்டைகள் வழங்குவதை, அரசு நிறுத்தி உள்ளது. இதனால், தனியாரிடம் சிமென்ட் மூட்டைகள் வாங்க, அதிக பணம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என, வீடு கட்டுவோர் புலம்பி வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீடு கட்டும் பயனாளிகளுக்கு அரசு சலுகை சிமென்ட், ஒரு ரேஷன் கார்டுக்கு, அதிகபட்சமாக, 25 மூட்டைகள் தான் வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி தான் சிமென்ட் மூட்டைகள் விற்பனை செய்கிறோம். ஆனால், சிமென்ட் மூட்டைகளின் எண்ணிக்கை குறைப்பால் பயனாளிகள் அதிகளவில் வருவதில்லை.
இதனால், அம்மா சிமென்ட், அதிகளவில் கிடங்கிற்கு கொண்டு வருவதில்லை.
மேலும், சில நேரங்களில் சிமென்ட் மூட்டைகள் இருப்பு இல்லாததால் பயனாளிகளை திரும்பி அனுப்புகிறோம்.
குறைந்த பட்சம் 1,000 மூட்டைகளுக்கு முன்பதிவு வந்தால் மட்டுமே சிமென்ட் மூட்டைகள் கொண்டு வந்து விற்பனை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

