sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணி கோவில் மண்டபத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு திடீர் தடையால் அதிருப்தி

/

திருத்தணி கோவில் மண்டபத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு திடீர் தடையால் அதிருப்தி

திருத்தணி கோவில் மண்டபத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு திடீர் தடையால் அதிருப்தி

திருத்தணி கோவில் மண்டபத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு திடீர் தடையால் அதிருப்தி


ADDED : ஆக 04, 2025 03:06 AM

Google News

ADDED : ஆக 04, 2025 03:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் நிர்வாக அனுமதியுடன் இயங்கும் ஆர்.சி.சி., மண்டபத்தில், திருமணம் மற்றும் காதுகுத்து நிகழ்ச்சிகளுக்கு திடீரென அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

திருத்தணி முருகன் மலைக்கோவிலில் தேவர் மண்டபம், மயில் மண்டபம், உச்சிப்பிள்ளையார் மற்றும் ஆர்.சி.சி., மண்டபங்களில் கோவில் நிர்வாகம் அனுமதியுடன், பக்தர்களுக்கு திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன.

பக்தர்கள் தங்களது வேண்டுதல்களுக்காக, முருகன் மலைக்கோவிலில் திருமணம், காதுகுத்து, வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

முகூர்த்த நாட்களில் ஒரே நாளில், 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.

இதனால், ஒரு மாதத்திற்கு முன்பே விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் கோவில் அலுவலகத்தில் ஒப்படைத்து, உரிய கட்டணம் செலுத்தி ரசீது பெற வேண்டியது அவசியம்.

தேவர் மண்டபம், மயில் மண்டபம், உச்சிப்பிள்ளையார் மண்டபங்களில் திருமணம் செய்வதற்கு, 20,000 ரூபாயும், ஆர்.சி.சி., மண்டபத்தில் 5,000 ரூபாயும், கோவில் நிர்வாகம் கட்டணமாக வசூலிக்கிறது.

மேலும் ஆர்.சி.சி., மண்டபத்தில் காதுகுத்து மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடத்தப் படுகிறது.

இதற்கு கோவில் நிர்வாகத்திற்கு, 50 ரூபாய் கட்டணமாக செலுத்தினால், பக்தர்கள் காதுகுத்து, வளைகாப்பு நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம்.

இதற்கு முன் அனுமதி தேவையில்லை. இதனால், ஏழை எளிய மக்களுக்கு, பெரும் பயனுள்ளதாக இருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி முதல் கோவில் நிர்வாகம் முன்னறிவிப்பு இல்லாமல் ஆர்.சி.சி., மண்டபத்தில் திருமணம் செய்வதற்கும், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கும் தடை விதித்துள்ளது.

கோவில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால், பக்தர்கள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆர்.சி.சி., மண்டபத்தில் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வழக்கம் போல் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வந்தபோது, கோவில் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக ஆர்.சி.சி. மண்டபத்தில் அனுமதி கிடையாது என திரும்பி அனுப்புகின்றனர். முன்னறிவிப்பு செய்திருந்தால், சுபநிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உறவினர், நண்பர்களுடன் வந்து திரும்பி செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. - முருக பக்தர்கள், திருத்தணி.


அன்னதான கூடம்

தற்காலிக இடமாற்றம்

திருத்தணி முருகன் கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை என, தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. தற்போதுள்ள அன்ன தான கூடத்தில் போதிய இடவசதி இல்லாததால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆகையால் 'மாஸ்டர் பிளான்' திட்டத்தில், புதிய கட்டடம் கட்டுவதற்கு பணிகள் ஆடி கிருத்திகை விழாவிற்கு பின் துவக்கப் படவுள்ளது . பக்தர்களுக்கு புதிய அன்னதான கூட கட்டடம் கட்டும் வரை, ஆர்.சி.சி., மண்டபத்தில் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்படவுள்ளது. இதனால் ஆர்.சி.சி., மண்டபத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருமண முகூர்த்தங்கள் மலைக்கோவில் தேவர் மண்டபம், மயில் மண்டபம், உச்சிப்பிள்ளையார் மண்டபங்களில் நடத்திக் கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு பலகை ஓரிரு நாளில் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருத்தணியில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

ஆடிப்பெருக்கு விழா காரணமாக, நேற்று திருத்தணி முருகன் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்தனர். மூன்று மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசித்தனர். திருத்தணி முருகனை தரிசிக்க, தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை நாள் என்பதாலும், ஆடிப்பெருக்கு விழா காரணமாகவும், வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கூட்டம் அதிகரிப்பால், பக்தர்கள் பொது தரிசன வழியில், நீண்ட வரிசையில், மூன்று மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் கட்டண சிறப்பு வழியில், ஒன்றரை மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானையுடன், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் தலைமையில், 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.








      Dinamalar
      Follow us